சாம்சங் கேலக்ஸி டேப்லெட்

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் மூன்று மாடல் டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. கேலக்ஸி டேப் எஸ்5. இ, டேப் ஏ 10.1, டேப் ஏ 8 என்ற இம்மூன்று மாடல்களும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில், ஏற்ற விலையில் வடிவமைக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதில் பிரீமியம் மாடலான டேப் எஸ்5.இ. மாடல் விலை ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையாகும். அடுத்த மாடலான ஏ 10.1 மாடல் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையாகும். பிரவுசிங் பணிக்கு அதிக அளவில் டேப்லெட்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருகிறது. பெரிய அளவிலான தொடு திரையைக் கொண்டதாக இவை மூன்றும் வந்துள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் எனும் மின்னணு தொழில்நுட்ப மாநாட்டில் கேலக்ஸி டேப் எஸ்5.இ. அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ள தொழில்நுட்பம் சாதாரண கம்ப்யூட்டரை விட இரு மடங்கு அதிகமாகும். சமீபகாலமாக 4- ஜி டேப்லெட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு முதல் காலாண்டில் டேப்லெட் விற்பனை 62 சதவீதமாக உள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் இவற்றுக்கு இடைப்பட்ட பணிகளை நிறைவேற்ற ஒரு மின்னணு சாதனம் தேவைப்படுகிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் டேப்லெட்கள் இருப்பதால் அவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. சாம்சங்கின் இப்புதிய வரவுகள் அந்நிறுவன விற்பனை சந்தையை நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Comments