You will be redirected to the script in

seconds
Puthiyaseithi | புதிய செய்தி: மீனம் வைகாசி மாத ராசிபலன்கள்

Monday, May 10, 2021

மீனம் வைகாசி மாத ராசிபலன்கள்

மீன ராசி நேயர்களே!

பிலவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். அதே நேரத்தில் லாபாதிபதி சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே விரயத்திற்கேற்ற வரவு வந்து கொண்டே இருக்கும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சனி பகவானைப் பார்ப்பதால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும்.

சனியின் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கு 11, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் சனி வக்ரம் பெறும்பொழுது நன்மையும் தீமையும் கலந்தே நடைபெறும். இடமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் என்ற விதத்தில் ஏதேனும் ஒரு மாற்றம் உண்டு. ஆயினும் மாறிச் சென்ற இடம் திருப்தியில்லாமல் மீண்டும் பழைய இடத்திற்கே வரக்கூடிய சூழ்நிலையும் உருவாகலாம். வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

செவ்வாய்-சனி பார்வைக் காலம்

உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி. இவை இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்ளும் விதத்தில் இம்மாதக் கிரக நிலை இருக்கின்றது. எனவே இடம், பூமியால் பிரச்சினைகள் ஏற்படலாம். கடன் சுமையின் காரணமாக வாங்கிய இடத்தை விற்க நேரிடலாம். ‘ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தினாலும் ஆரோக்கியத்தில் தொல்லை ஏற்படுகின்றதே’ என்று கவலைப்படுவீர்கள்.

புத- சுக்ர யோகம்

உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அதே நேரத்தில் 4, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்று சேர்ந்து சஞ்சரிப்பது யோகம் தான். அதிலும் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். அரசுப் பணிக்கு முயற்சி செய்தவர்களுக்கு அது கிடைக்கலாம்.

மிதுன-சுக்ரன் சஞ்சாரம்

மே 29-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து சுக்ர மங்கள யோகத்தை உருவாக்குகின்றார். இதன் விளைவாக உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் பலநாட்களாக எதிர்பார்த்த சலுகை இப்பொழுது கிடைக்கலாம்.

கடக-செவ்வாய் சஞ்சாரம்

ஜூன் 3-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுகின்றார். இதன் விளைவாக பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் மேலோங்கும். குடியிருக்கும் வீட்டாலும் பிரச்சினைகள் வரலாம். புதியவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. இக்காலத்திலும் செவ்வாய்-சனி பார்வை தொடர்வதால் சொத்துப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

இம்மாதம் வியாழன் தோறும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 15, 16, 25, 26, 27, 31, ஜூன்: 1, 6, 7, 12, 13 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் வாங்கல்களில் திருப்தி ஏற்படாது. கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் கைகூடாமல் போகலாம். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகள் உதவி செய்வர். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் வந்து சேரும். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.

No comments: