ரிஷப ராசி நேயர்களே!
பிலவ வருடம் வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். அவரோடு தன பஞ்சமாதிபதியான புதனும், சுக ஸ்தானாதிபதியான சூரியனும் இணைந்திருக்கிறார்கள். மேலும் ஜென்மத்தில் ராகுவும் இருக்கின்றது. ராகுவோடு யோகம் தரும் கிரகங்கள் இணைந்திருப்பதால் பல நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரப்போகின்றது.
சனியின் வக்ர இயக்கம்
உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி. அவர் மாதத் தொடக்கத்திலேயே வக்ர நிலையில் சஞ்சரிக்கின்றார். அதே நேரத்தில் அதிசார கதியில் இயங்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 2-ம் இடமான தன ஸ்தானத்தில் பதிகின்றது. எனவே வக்ர சனியாக இருந்தாலும் கூட வளர்ச்சியில் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் தொழிலில் சில நல்ல வாய்ப்புகள் வந்து கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, உங்களோடு பணிபுரிபவர்களுக்கு கிடைக்கலாம்.
செவ்வாய்-சனி பார்வைக் காலம்
உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். சனி பகவான் 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல. விரயாதிபதியும். 9-ம் இடத்திற்கு அதிபதியும் ஒன்றையொன்று பார்த்துக் கொள்வதால் பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்யக் கூடிய சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகும். உடன்பிறப்புகள் உங்களுடைய கருத்துக்களை ஆதரிக்க மறுப்பர்.
புத-சுக்ர யோகம்
உங்கள் ராசிநாதனாகவும் 6-க்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவை இரண்டும் உங்கள் ராசியிலேயே ஒன்று கூடுவது யோகம்தான். புத சுக்ர யோகம் இருப்பதால் பொருளாதாரத்தில் திடீர் தனலாபம் வந்து சேரும். ‘தங்கம், வெள்ளி போன்றவற்றில் முதலீடு செய்யலாமா?’ என்ற சிந்தனை மேலோங்கும். சூரியனும் இணைந்திருப்பதால் பொது வாழ்வில் பொறுப்புகள் கிடைக்கும்.
மிதுன-சுக்ரன் சஞ்சாரம்
மே 29-ந் தேதி மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கின்றார். உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்திற்குச் செல்லும் இந்த நேரம் ஒரு பொன்னான நேரமாகும். தொழில் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். அதுமட்டுமல்ல, சம்பள உயர்வு வந்து சேரும். உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களின் பழக்கத்தால் ஒருசில நல்ல வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும்.
கடக-செவ்வாய் சஞ்சாரம்
ஜூன் 3-ந் தேதி கடக ராசிக்குச் செவ்வாய் செல்கின்றார். அங்கு அவர் நீச்சம் பெறுவதால் விரயங்கள் குறையும். அதே நேரம் சப்தமாதிபதியாகவும் செவ்வாய் இருப்பதால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வரலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. இக்காலத்தில் செவ்வாய், சனியை சப்தம பார்வையாகப் பார்ப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும்.
இம்மாதம் வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே : 15, 16, 20, 21, 31, ஜூன்: 1, 4, 5, 11, 12. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி கூடும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களுக்குரிய வேலைவாய்ப்புகள், கல்யாண காரியங்கள் போன்றவை நடைபெறுவதில் இருந்த தாமதங்கள் அகலும். தாய் மற்றும் உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும்.
No comments:
Post a Comment