சுகர் பிரீ ரைஸ் குக்கர்

பொதுவாகவே இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அரிசி உணவு மிக முக்கியமான உணவாக ருசிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி ஆசிய நாடுகளிலும் மக்களின் பிரதான உணவாக அரிசி உள்ளது. ஆனால் சமீப காலமாக அரிசி உணவால் நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய், இதயம் சார்ந்த நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் உடல் எடை அதிகரிப்புக்குக் காரணமாகவும் அரிசி உள்ளது.

இதனாலேயே பலரும் மாற்று உணவுக்கு மாற முடியாமல் அவதிப்படுகின்றனர். அரிசி உணவை சமைக்கும் போது அதில் அதிக அளவிலான மாவுச்சத்து எனப்படும் ஸ்டார்ச் தங்கிவிடுகிறது. இதுதான் அனைத்து விதமான நோய்களுக்கும் காரணமாகிறது என கண்டறியப்பட்டுள்ளது. இதைப் போக்கும் விதமாக வந்துள்ளதுதான் நவீன மின்சார குக்கர் கிரைன்ஸ். பொதுவாக கிரைன்ஸ் என்றால் சிறு தானியங்கள் என்றும் பொருள்படும். ஆனால் இந்த ‘கிரைன்ஸ்’ எனப்படும் குக்கர் அரிசி உணவில் அதிகப்படியான மாவுச்சத்துகளை நீக்கி, நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இது அரிசியை நான்கு வித வடிவங்களில் சாதமாக வடிக்கிறது. முதலாவதாக இதில் உள்ள தெர்மோ உணர் கருவி அரிசியில் உள்ள உடலுக்குத் தேவையற்ற ஆர்.டி.எஸ். எனப்படும் மாவுச் சத்து பாத்திரத்தின் அடிப்பகுதியில் தங்க உதவுகிறது. இத்துடன் அரிசியில் உள்ள சர்க்கரைச் சத்தும் நீக்கப்பட்டு பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள குழாயின் வழியே வெளியேறுகிறது. இதன் பிறகு அரிசி உரிய பதத்தில் வேகவைக்கப்படுகிறது. அடுத்து அரிசி ஒட்டிக் கொள்ளாமல் உதிரியாக கிடைக்க சாதத்தில் உள்ள ஈரப்பதம் முற்றிலுமாக உறிஞ்சப்படுகிறது.

இதில் 30 முதல் 40 நிமிடத்தில் சாதம் தயாராகிவிடும். அத்துடன் சூடு நீண்ட நேரம் இருக்கும். அரிசி உணவு மட்டுமின்றி, நூடுல்ஸ், பாஸ்தா, உருளைக் கிழங்கு போன்றவற்றையும் வேக வைக்க முடியும். இந்த குக்கரில் சமைக்கப்பட்ட அரிசி உணவை உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்ததும் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.28 ஆயிரம். மருத்துவத்துக்கு செலவிட்டு உடல் ஆரோக்கியம் கெடுவதைவிட ஆரோக்கியமான உணவை சமைக்க உதவும் பொருளுக்கு செலவிடலாமே.

Comments