சோலார் ஸ்மார்ட் வாட்ச்

இது முழுக்க முழுக்க ஸ்மார்ட் கருவிகளின் உலகம். புதுப்புது கண்டுபிடிப்புகள் தினசரி அணிவகுத்து வந்து கொண்டேயிருக்கின்றன. அவை அனைத்துமே நமது தேவைகளை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில்இருக்கின்றது. அந்த வகையில் கார்மின் நிறுவனம் சூரிய ஆற்றலில் செயல்படும் (சோலார்) ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.

இவை பெனிக்ஸ் 6 சீரிஸ் என்ற பெயரில் வந்துள்ளன. இதில் குறிப்பாக பெனிக்ஸ் 6 எக்ஸ் மாடல் முழுக்க முழுக்க சூரிய மின்னாற்றலில் செயல்படக்கூடியது. இந்த மாடல் கடிகாரங்களில் மேல் பகுதியில் சூரிய ஒளியிலிருந்து மின் சக்தியை சேமிக்கும் செல்கள் உள்ளன. இதிலிருந்து மின்சாரம் சேமிக்கப்பட்டு 3 நாட்களுக்கு கைக்கடிகாரம் தொடர்ந்து செயல்பட வழிவகுக்கும். இந்த ஸ்மார்ட் வாட்சில் 1.4 அங்குல டிஸ்பிளே திரை உள்ளது.

சூரிய ஆற்றலை உள்ளிழுத்து பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கும் பணியை செய்தாலும், இதன் திரை கண்கூசும் அளவுக்கு இருக்காது.

வழக்கமான கடிகாரங்களைப் போலவே இதிலும் மிகவும் தெளிவாக நேரம் உள்ளிட்ட விவரங்களை பார்க்க முடியும். நேவிகேஷன் வசதி, ஜி.பி.எஸ்., குளுநாஸ், கலிலியோ போன்ற வசதிகள் உள்ளன. இது நீங்கள் இருக்கும் இடத்தை தெளிவாக உணர்த்த வழிவகுக்கும். டைட்டானியம் உலோக அமைப்பால் இதன் மேல் பகுதி உள்ளது. 51 மி.மீ. அளவு விட்டமும், 14.9 மி.மீ. தடிமனும் கொண்டது. இதன் எடை 82 கிராம் மட்டுமே.

இதில் இதய துடிப்பை அறியும் வசதி, மற்றும் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றையும் அறிந்து கொள்ளும் வசதி உள்ளது. 32 ஜி.பி. நினைவக வசதி இருப்பதால் இசை ஆல்பங்களையும் இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதன் விலை சுமார் ரூ.80 ஆயிரம்.

Comments