செயற்கை நுண்ணறிவு கொண்ட எல்.ஜி. வாஷிங் மெஷின்

மின்னணு சாதனங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்துவதில் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதன் பயனாக வாடிக்கையாளராகிய பொதுமக்களுக்கு அதிநவீன நுட்பங்கள் கொண்ட தயாரிப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் எல்.ஜி. நிறுவனத்தின் சமீபத்திய வரவுதான் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் செயல்படும் வாஷிங் மெஷினாகும். திங்க்கியூ ஏ.ஐ. வாஷிங் மெஷின் பிரன்ட் லோடிங் தன்மையிலானது.

இது இயந்திரத்தில் போடப்படும் துணியின் தன்மையைப் பொருத்து அது துவைக்கும் நிலையை மாற்றும். அதாவது கடினமான பெட்ஷீட், போர்வை போன்றவை துவைக்க போட்டால் அது கடினமாக சுற்றும், தேவைப்பட்டால் அழுக்கை நீக்க சுடு நீரை பீய்ச்சும்.

அதேசமயம் மென்மையான பட்டு துணிகளை போட்டால் அதற்கேற்ப இதன் துவைக்கும் நிலைமாறும். இதை விரைவாகவும், வேகமாகவும் செய்வதற்கு உதவுகிறது செயற்கை நுண்ணறிவு. இதற்காக இந்த நுண்ணறிவு திறனில் 20 ஆயிரம் துணி வகைகள் பற்றிய தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

இத்தகைய நுட்பம் இருப்பதால் துணிகள் பாதுகாப்பாக துவைக்கிறது. முந்தைய மாடல்களைக் காட்டிலும் இதில் துணி துவைக்கும் அளவு 18 சதவீதம் மேம்பட்டதாக உள்ளது. எல்.ஜி. ‘டர்போ வாஷ்’ என்ற பெயரில் வந்துள்ள இந்த சலவை இயந்திரம் 39 நிமிடங்களுக்குள்ளாக மிகச் சிறப்பாக துணியை துவைத்துத் தருகிறது.

இதில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க 3டி (முப்பரிமாண) முறை பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதிக அழுத்தத்தில் தண்ணீரை அடிப்பதிலேயே துணிகளின் மீதான அழுக்குகள் நீங்கிவிடுகிறது. மேலும் இதில் அதிக துணிகளை துவைக்கவும் முடிவது கூடுதல் சிறப்பாகும்.

இந்த சலவை இயந்திரத்துக்கு 10 ஆண்டு உத்தரவாதத்தையும் எல்.ஜி. அளிப்பதிலிருந்தே தங்கள் தொழில் நுட்பத்தின் மீது அந்நிறுவனத்துக்குள்ள நம்பிக்கை புலனாகும். கொரியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு இந்தியாவில் இதை அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இது இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments