‘போலராய்டு மின்ட்’ டிஜிட்டல் பாக்கெட் பிரிண்டர்

புகைப்படம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போலராய்டு நிறுவனம் உடனடியாக புகைப்பட பிரிண்ட் போடும் டிஜிட்டல் பாக்கெட் பிரிண்டரை அறிமுகம் செய்துள்ளது. கேமராவிலோ அல்லது ஸ்மார்ட்போனிலோ புகைப்படம் எடுப்பது எளிதான விஷயமாகி வருகிறது. ஆனால் படம் பிடித்த காட்சிகளை நண்பர்களுக்கு பிரதி எடுத்து அளிப்பது சிரமமான விஷயமாகி வருகிறது. இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக வந்துள்ளதுதான் போலராய்டு நிறுவனத்தின் ‘மின்ட்’ என்ற பெயரிலான டிஜிட்டல் பாக்கெட் பிரிண்டர்.

ஸ்மார்ட்போனில் எடுத்த புகைப்படத்தை இந்த பிரிண்டருக்கு அனுப்பி உடனடியாக படம் எடுக்கலாம். வயர்லெஸ் அடிப்படையில் செயல்படும் இந்த பிரிண்டருக்கு இங்க் தேவையில்லை.

மேலும் வழக்கமான பிரிண்டரில் பயன்படுத்தும் விலை உயர்ந்த வண்ணக் கலவையான கேட்ரெஜ்களும் தேவையில்லை. 60 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் இதிலிருந்து பிரிண்ட் எடுக்க முடியும்.

இந்நிறுவனமே போலராய்டு மின்ட் ஆப் (செயலி) ஒன்றையும் செயல்படுத்துகிறது. இதன் மூலம் புகைப்படம் எடுக்கும்போது நீங்கள் புகைப்படக் கலைஞராக இல்லாவிட்டாலும் எடுக்கும் படங்கள் துல்லியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறது. இதன் விலை சுமார் ரூ.9,350.

Comments