ஜியோமியின் ‘பிளாக் ஷார்க்’

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சீனாவின் ஜியோமி நிறுவனம் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர் பேங்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 வாட் விரைவான சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்நிறுவனத்தின் பிளாக் ஷார்க் பிராண்டானது கேமிங் ஸ்மார்ட்போன் வரிசையில் மிகவும் பிரபலமானது. வீடியோ கேம் விளையாடுவோருக்கு அவர்கள் பயன்படுத்தும் கேட்ஜெட்கள் நீண்ட நேரம் எவ்வித சிரமமும் இன்றி செயல்படக் கூடியதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பிராண்ட் இப்போது பவர் பேங்க்கை வெளியிட்டுள்ளது.

இது மிகவும் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டது. மிகவும் கரடு முரடான தோற்றம் கொண்டதாக, அதாவது எத்தகைய சூழலையும் தாக்குப்பிடித்து செயல்படக் கூடிய தோற்றம் கொண்டதாக இது உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மேல் பகுதி ரப்பர் மற்றும் உலோக பாகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உலோக பாகம் சில்வர் மேல்பூச்சு கொண்டதாக உள்ளது. இதில் உள்ள பேட்டரியின் அளவைக்காட்டுவதற்காக இதில் பச்சை விளக்கு உள்ளது.

அதேபோல இதை சார்ஜ் செய்தால் அதை உணர்த்துவதற்காக எல்.இ.டி. விளக்கு ஒளிரும். இதில் 18 வாட் பாஸ்ட் சார்ஜ் வசதி இருப்பதால் இதன் மூலம் சார்ஜ் செய்யப்படும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்றவை விரைவாக சார்ஜ் ஆகிவிடும். இதை சார்ஜ் செய்யும் போது அதிக சூடாவதை தடுக்கும் அமைப்பு உள்ளது. இதன் விலை சுமார் ரூ.1,200.

Comments