எல்.ஜி. 8கே ஓலெட் டி.வி.

ஏறக்குறைய ஓராண்டாக அறிவித்து வந்த 8கே ஓலெட் டி.வி.யை கொரியாவின் எல்.ஜி. நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 42 ஆயிரம் டாலராகும் (சுமார் ரூ.30.25 லட்சம்). 88 அங்குலம் கொண்டதாக இந்த ஸ்மார்ட் டி.வி. வெளிவந்துள்ளது. 8 கே தொழில்நுட்பம் என்றால் இதில் படங்கள் மிகவும் துல்லியமாக தெரியும் என்பதுதான். அதாவது 7,680 X 4,320 பிக்ஸெல் என்ற அளவுக்கு மிகவும் நுட்பமான விஷயங்கள் இதில் மிகத் துல்லியமாகத் தெரியும்.

ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 4கே ஸ்மார்ட் டி.வி.க்களை விட இது 400 சதவீதம் பிக்ஸெல் அதிகமாகும். சாதாரண ஹெச்.டி. டி.வி.யைக் காட்டிலும் இது 16 மடங்கு துல்லியமான படக்காட்சிகளை காண்பிக்கும். இதில் எல்.ஜி.யின் 90-வது தலைமுறை 8கே பிராசஸர் உள்ளது.

அத்துடன் ஹெச்.டி.ஆர். டால்பி விஷன், ஆப்பிள் ஏர் பிளே 2 ஹோம்கிட் ஆகியன துணையாக இருக்கும். இதில் ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட்ஸ் உள்ளது. தற்போது சந்தையில் 88 அங்குல டி.வி. விற்பனைக்கு வந்துள்ளது எல்.ஜி. பிராண்டில் மட்டுமே. சோனி மற்றும் சாம்சங் ஆகிய நிறுவனங்கள் 8கே தொழில்நுட்பத்தில் 98 அங்குல டி.வி.யைத்தான் அறிமுகப்படுத்தி இருந்தன. ஆனால் எல்.ஜி. 88 அங்குல டி.வி.யை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் ஓலெட் டி.வி.யில் பயன்படுத்தியுள்ள பேனல் மிகவும் விலை உயர்ந்தது. இதனாலேயே இதன் விலையும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்.ஜி. நிறுவனத்தின் 4கே மாடல் 77 அங்குல அளவில் மட்டுமே கிடைக்கிறது. அதன் விலை 5,499 டாலர் ஆனால் தற்போது வந்துள்ள 8கே மாடல் விலை அதைப்போல 8 மடங்கு அதிகம். வீட்டிலேயே ஹோம் தியேட்டர் வைக்கும் வசதி படைத்தவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு இது வெளிவந்து உள்ளது.

எல்.ஜி. நிறுவனத்தின் திங்க்யூ செயற்கை நுண்ணறிவு நுட்பம் கொண்டது. கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அலெக்ஸா மூலம் செயல்படக் கூடியது.

Comments