‘இன்வெர்ட்டர்’ பயன்பாட்டில் முக்கியக் குறிப்புகள்

மின்வெட்டு காரணமாக குடியிருப்புகளின் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்வதில் இன்வெர்ட்டர்கள் பயன்படுகின்றன. அவை தாமாக இயங்குபவை என்பதால், மின்சாரம் தடைபட்டவுடன் இயங்க ஆரம்பித்துவிடும். மின்சாரம் வந்ததும் அதன் இயக்கம் தானாகவே நின்றும் விடும். இன்வெர்ட்டரில் சார்ஜ் குறைந்துவிட்டால், அளிக்கப்பட்ட மின்சார இணைப்பு வழியாக அதுவாகவே ‘சார்ஜ்’ செய்து கொள்ளும். அதனால் ‘இன்வெர்ட்டர்’ மற்றும் பேட்டரி ஆகிய இரண்டையுமே மின்சார இணைப்பில் வைத்திருக்க வேண்டும்.

‘இன்வெர்ட்டர்’ மூலம் வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் கணினி போன்ற சாதனங்கள் தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்கின்றன. அதுபோன்ற சமயங்களில் தகுந்த அளவு மின்சார சப்ளை இருந்தால்தான் வீட்டு உபகரணங்களில் பழுது ஏற்படாமல் பாதுகாக்கப்படும். அதன் அடிப்படையில் ‘இன்வெர்ட்டர்’ பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதற்கான பராமரிப்புகள் பற்றி வல்லுனர்கள் குறிப்பிடும் தகவல்களை இங்கே காணலாம்.

* ‘இன்வெர்ட்டரை’ எப்போதுமே உயரமான ‘லாப்ட்’ அல்லது அலமாரி மேல் வைப்பதுதான் பாதுகாப்பானது. அப்போதுதான் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் இருக்கும். ‘இன்வெர்ட்டரை’ கீழே வைக்க வேன்டிய நிலையில் ஈரப்பதம் இல்லாமலும், தண்ணீர் படாத இடத்திலும் வைக்கப்படுவதுடன் குழந்தைகள் அணுகாத இடமாகவும் இருக்க வேண்டும்.

* மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ச்சியாக இருக்கும் நிலையில் மாதத்தில் ஒரு நாள் முற்றிலும் ‘இன்வெர்ட்டர்’ மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அதன் செயல்திறன் குறையாமல் இருக்கும்.

* ‘இன்வெர்ட்டர்’ பேட்டரி டிஸ்டில்டு வாட்டர் (Battery distilled Water) எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், ‘இன்வெர்ட்டர் சார்ஜ்’ ஆகும் நிலையில் அதன் மின் இணைப்பைத் துண்டிப்பது கூடாது. குறிப்பாக, சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் பேட்டரியை கழற்றுவதும் தவறானது.

* இன்வெர்ட்டர் பேட்டரிகளில் உள்ள ‘டியூப்ளர்’ (Tubular battery) மற்றும் ‘பிளாட்’ (Flat Battery) ஆகிய இரு வகைகளில் ‘டியூப்ளர் பேட்டரி’ வகை பல இடங்களில் பயன்பாட்டில் இருந்து வருவதாக அறியப்பட்டுள்ளது.

* வெப்பநிலை அதிகமாக உள்ள இடம், கியாஸ் ஸ்டவ் வைக்கப்பட்டுள்ள பகுதி, நெருப்பு பயன்படும் இடங்கள், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருள்கள், மெழுகுவர்த்தி ஆகியவற்றைப் பயன்படுத்தும் இடங்களுக்கு அருகாமையில் ‘இன்வெர்ட்டர்’ வைப்பதை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.

* ‘சார்ஜ்’ செய்யும்பொழுது ‘இன்வெர்ட்டருக்கு’ அனுமதிக்கப்பட்ட வேகத்தை விடவும் ( Permissible speed) கூடுதலான வேகத்துடன் ‘சார்ஜ்’ செய்வது கூடாது. விரைவாக ‘சார்ஜ்’ செய்யப்பட வேண்டும் என்று நினைத்து வேகத்தை அதிகரிப்பதன் காரணமாக அவை விரைவில் பழுதடையும் வாய்ப்பு உண்டு.

* தொடர்ந்து பல நாட்கள் ‘இன்வெர்ட்டரை’ பயன்படுத்தாத சூழலில், நேராக நிறுத்தி வைக்கவேண்டும். அவற்றில் தூசி, குப்பை ஆகியவை படியாமலும், காற்றோட்டமான இடத்திலும் வைக்கவேண்டும்.

* தூசிகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் இயங்கிக்கொண்டிருக்கும் ‘இன்வெர்ட்டர்’ மீது துணிகள் மற்றும் ‘ஷீட்’ போன்றவற்றை போட்டு மூடி வைப்பது கூடாது. வாங்கிய புதிதில் ‘இன்வெர்ட்டரின்’ மீது தூசிகள் படியாமல் இருக்க சிலர் துணி அல்லது அட்டைப் பெட்டிகள் கொண்டு மூடிவைப்பதாக அறியப்பட்டுள்ளது. அது ஆபத்தை விளைவிக்கக்கூடிய செயலாகும்.

* எப்போதும் ‘ Inv-e-rt-er UPS ’ வாங்கும்போது அதனுடன் கொடுக்கப்படும் Ma-nu-al Gui-de விவரங்களில் உள்ள பராமரிப்பு முறைகள் பற்றி படித்து, அதன்படி பராமரிப்புகளை மேற்கொண்டால் நீண்ட நாட்களுக்கு ‘இன்வெர்ட்டர்’ உழைக்கும்.

Comments