சாம்சங் கேலக்ஸியின் நோட் 10, நோட் 10 புரோ

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது பிரபல ஸ்மார்ட்போன் மாடலில் கேலக்ஸி நோட் 10 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் கேலக்ஸி நோட் 10 பிளஸ் எனும் மாடலும் அறிமுகமாகியுள்ளது. தலைமுறை சார்ந்து மிகச் சிறப்பாக செயல்படும் வகையில் இதன் வேகம் உள்ளது. சிறப்பான செயல்பாடு அனைத்துத் தரப்பினரையும் கவரும் விதமாக உள்ளது. சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனில் புதிய படைப்புகளை சமீபகாலமாக அதிக அளவில் அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. குறிப்பாக அகலமான திரை, ஸ்டைலஸ் பேனா எஸ் ஆகியன இவற்றின் சிறப்பம்சங்களாகும். அந்த வகையில் கேலக்ஸி வரிசை மாடல்கள் பொதுமக்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றன. இந்த இரண்டு மாடலுமே மிகச் சிறந்த வடிவமைப்பு, வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான செயல்பாடு கொண்டவை. முதல் முறையாக கேலக்ஸி நோட் 10 மாடல் இரண்டு அளவுகளில் வந்துள்ளது. இவை இரண்டுக்குமே ‘எஸ்’ பேனா உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் திரையில் இதைக் கொண்டு எழுதலாம். இதற்காக சாம்சங் டெக்ஸ் எனும் சிறப்பான டிஜிட்டல் டெக்ஸ் எழுதுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் வாடிக்கையாளர்களுக்கு கம்ப்யூட்டரில் பணியாற்றுவது போன்ற அனுபவத்தை நிச்சயம் அளிக்கும். இவற்றில் 7 என்.எம். பிராசஸர் உள்ளது. இவை இரண்டு மாடலிலுமே 12 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம் கொண்ட மாடல்கள் வந்துள்ளன. இவற்றில் ஏ.ஆர். டூடுல் மற்றும் 3 டி ஸ்கேனர் வசதி உள்ளது. இதன் மூலம் உபயோகிப்பாளர்கள் தங்களது கற்பனைத் திறனுக்கேற்ப வடிவங்களை வரைந்து நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்ப முடியும். இந்த மாடல் உருவாக்கம், வடிவமைப்பில் பெங்களூருவில் உள்ள இந்நிறுவன ஆராய்ச்சி மையம் பெரும் பங்கு வகித்துள்ளது. இதனால் கேலக்ஸி நோட் 10 உருவாக்கத்தில் இந்தியர்களின் பங்கு அதிகமாகவே கொரிய தயாரிப்பில் உள்ளது எனலாம். இந்த ஸ்மார்ட்போனில் புரோ கிரேட் கேமரா எனும் தொழில்நுட்பம் உள்ளது. இது மிகச் சிறந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை பதிவு செய்ய உதவுகிறது. இதன் பின்பகுதியில் உள்ள 3 கேமராக்களில் முதலாவது 16 மெகா பிக்ஸெல்லும், இரண்டாவது 12 மெகா பிக்ஸெல்லும், 3-வது கேமரா 2 மெகா பிக்ஸெல்லும் கொண்டிருக்கும். குறைவான வெளிச்சத்திலும் மிகச் சிறப்பாக புகைப்படம் எடுக்க இவை உதவும். முன்பகுதியில் 10 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இது குறைந்த வெளிச்சமிருந்தாலும் சிறப்பாக படமெடுக்க உதவும். இதில் உள்ள கேமராக்கள் மூலம் துல்லியமாக வீடியோ காட்சிகளையும் பதிவு செய்ய முடியும். இத்துடன் ஜூம் இன் மைக்ரோபோன் இருப்பதால் வீடியோ காட்சிகள் தத்ரூபமாக சுற்றுப்புற சத்தத்துடன் பதிவாகும். காட்சிகளை உடனுக்குடன் எடிட் செய்வதற்கான வசதியும் இதில் உள்ளது. இதில் ஸ்கிரீன் ரெகார்டர் வசதியும் உள்ளது. அதாவது திரையில் தோன்றும் காட்சிகளையும் படமெடுத்துக் கொள்ள முடியும். இதில் முப்பரிமாணத்தில் (3டி) படங்களை எடுக்க முடியும். அனைத்துக்கும் மேலாக இதில் நைட்மோட் எனும் வசதி உள்ளது. இது இருளில் குறைவான வெளிச்சமிருந்தால் கூட படமெடுத்து தள்ளிவிடும். இதில் வயர்லெஸ் முறையில் மின்சாரத்தை பிற சாதனங்களுக்கு அனுப்பும் வசதி உள்ளது. அதாவது ஸ்மார்ட்போனில் உள்ள மின்சக்தியை ஹெட்போனுக்கு மாற்ற முடியும். அதேபோல ஸ்மார்ட்வாட்சுக்கும் மின்சாரத்தை அனுப்ப முடியும். கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடல் விலை ரூ.79,999 ஆகும். மற்றொரு மாடலான கேலக்ஸி நோட் 10 மாடல் விலை ரூ.69,999 ஆகும். இவை இரண்டுமே 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் மற்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவக வசதியோடு வந்துள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்டு போடும் வசதியும் உள்ளது. இதன் மூலம் 1 டெரா பைட் அளவுக்கு தகவல்களை சேமிக்க முடியும். இவை இரண்டுமே கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளன. அறிமுக சலுகைகள் பலவற்றை நிறுவனம் அறிவித்துள்ளது. விழாக்கால சீசனில் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் மிகச் சிறந்த வரவேற்பைப் பெறும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

Comments