புது வடிவம் பெறும் எஸ்.எம்.எஸ்.

கடந்த 1992-ம் ஆண்டில்தான் முதன்முதலில் வணிக ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை தொடங்கியது. ஆனால், அப்போது இருந்த அதே 160 கேரக்டர்கள்தான் தற்போதும் உள்ளன. அதே எழுத்து வடிவம்தான். அதற்குப்பிறகு வந்த எம்.எம்.எஸ். சேவையும் பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை. மாறாக வாட்ஸ்-அப், மெசெஞ்சர் போன்ற ‘இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்’கள் அந்த இடத்தை பிடித்துவிட்டன. இன்றைக்கு வங்கி, ஷாப்பிங் போன்ற வணிகரீதியான சேவைகளில்தான் அதிக அளவில் எஸ்.எம்.எஸ். பயன்பட்டு வருகிறது. மற்றபடி பெரும்பாலான தகவலுக்கு வாட்ஸ்-அப்தான். எனவே வாட்ஸ்-அப் வருகையால், எஸ்.எம்.எஸ். மூலம் வருமானம் பார்த்துவந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. இதற்கு தீர்வாக ஆர்.சி.எஸ். எனப்படும் ‘ரிச் கம்யூனிகேஷன் சர்வீஸ்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது. ‘ஆர்.சி.எஸ்.’ என்பது வெறும் எஸ்.எம்.எஸ். மட்டும் அல்ல. வாட்ஸ்-அப் போலவே இதிலும் படங்கள் அனுப்பலாம், வீடியோக்கள் ஷேர் செய்யலாம். குரூப் சாட், எமோஜி, ஸ்டிக்கர்கள், கியூ.ஆர். கோடு போன்ற அனைத்தையும் பயன்படுத்த முடியும். கூடவே உதவுவதற்காக கூகுள் அசிஸ்டன்ட், இன்ஸ்டன்ட் ரிப்ளை செய்ய ஏ.ஐ. என்ற நுட்பம், சாட் செய்யும் நபர் ஆன்லைனில் இருக்கிறாரா எனப் பார்க்க உதவும் வசதி, நிறுவனங்கள் அனுப்பும் மெசேஜை ‘வெரிபைய்ட்’ அக்கவுண்ட்கள் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளும் அம்சம் என அனைத்தும் இருக்கும். இத்துடன் வீடியோ கால் வசதியும் இணைக்கப்படலாம். இது அனைத்தும் நாம் தற்போது எஸ்.எம்.எஸ். அனுப்ப பயன்படுத்திக் கொண்டிருக்கும் ‘மெசேஜஸ் ஆப்’லேயே செய்யமுடியும். இதனை சாத்தியமாக்க வேண்டும் என்றால், இணைய வசதியும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவை. இந்த வசதி தற்போது ஐமெசேஜ் ஆப்பில் உள்ளது. ஆனால் ஆன்ராய்டு தளத்தில் இதுவரை இல்லை. இதை கொண்டு வரப்போகிறது கூகுள். இதை சாத்தியமாக்கிட கூகுள், 55 தொலைதொடர்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து உள்ளது. ‘சாட்’ என்ற பெயரில் ‘ஆர்.சி.எஸ்.’ வசதியை கூகுள் நிறுவனம் தனது ஆன்ராய்டு தளத்தில் கொண்டு வர போகிறது. இதற்காக இந்தியாவில், முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட கூகுள் முடிவு செய்துள்ளது. எனினும் இந்தியாவில் இத்திட்டம் முழுமையாக வருவதற்கு சில காலம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Comments