பல்லில் ஒட்டிக் கொள்ளும் குட்டி சென்சார்

மருத்துவத் துறை தொழில்நுட்ப வளர்ச்சிகள் உலகின் பல்வேறு இடங்களில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாசசூசெட்ஸ் நகரை சேர்ந்த டப்ட்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொறியாளர்கள் மிகச் சிறிய சென்சார் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த சென்சாரை பல்லில் ஒட்டி வைத்து விட்டால் வாய் மூலமாக உடலினுள் செல்லும் பொருட்களை ஆய்வு செய்கிறது. இந்த குட்டி சென்சார் மூன்று அடுக்குகளால் ஆனது. ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணை வைத்து இது பொருட்களை ட்ராக் செய்கிறது. உடம்பில் எவ்வளவு க்ளுகோஸ் செல்கிறது, ஆல்கஹால் அளவு எவ்வளவு ரத்தத்தில் கலந்திருக்கிறது, உப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது போன்ற தகவல்களை செல்போனுக்கு செயலி மூலம் தகவலாக அனுப்புகிறது. உடலில் இருக்கும் சர்க்கரை, உப்பு, ஆல்கஹால் ஆகியவற்றின் அளவுகளை தெரிந்து கொள்வதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்கலாம்.ஆபத்து வரும் முன்னரே தற்காத்துக் கொள்ள இந்த சென்சார் உதவுகிறது. இந்த சென்சாரை பல்லில் மட்டுமின்றி தோலிலும் ஒட்டிக் கொள்ளலாம். ஒவ்வொன்றையும் அறிய தனித்தனியாக ரத்த பரிசோதனை மேற்கொள்ளாமல் ஒரு சிறிய சென்சார் மூலமே அத்தகவல்களை அவ்வப்போது அறிந்து கொள்ள முடியும் என்பதால் இந்த சென்சாருக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Comments