வந்துவிட்டது போர்டு தண்டர்

போர்டு நிறுவனத்தின் எகோ ஸ்போர்ட் மாடலில் தண்டர் என்ற பெயரிலான புதிய எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளனர். எகோ ஸ்போர்ட் மாடலில் இது வேறு ஒரு ரகம். இந்த மாடலின் விலையை குறைவாக நிர்ணயித்ததால் ஏற்கனவே சந்தையில் உள்ள அனைத்து மாடல்களின் விலையையும் குறைத்துள்ளது போர்டு. போர்டு எகோ ஸ்போர்ட் மாடலில் ஆம்பியன்ட், எம்.டி. டிரென்ட், எம்.டி. டைட்டானியம், ஏ.டி. டைட்டானியம், எகோ பூஸ்ட் எஸ் ஆகிய மாடல்களில் பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடக்கூடிய கார்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய மாடல் தண்டர் விலை ரூ.10.18 லட்சத்தில் ஆரம்பமாகிறது. இதனால் முன்னர் அறிமுகமான மாடல்களின் விலையில் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை இந்நிறுவனம் குறைத்துள்ளது. புதிதாக அறிமுகமாகியுள்ள தண்டர் மாடலில் பெட்ரோலில் ஓடும் காரின் விலை ரூ.10.18 லட்சமாகவும், டீசலில் ஓடும் மாடல் விலை ரூ.10.68 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு உயர் ரக எஸ்.யு.வி. தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் முகப்பு தோற்றம் கிரில், முகப்பு விளக்கு, பனிப்பிரதேசங்களில் ஒளியை துல்லியமாக வீசும் பாக் விளக்கு, கிரில், விங் மிரர் ஆகியன கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது. 17 அங்குல அலாய் சக்கரங்களும், இரட்டை வண்ணத்திலான பானட், அழகிய கதவுகள் இதன் தரத்தை மேலும் மெருகூட்டுகிறது. இதன் உள்புறமும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இரட்டை வண்ணம் மிகச் சிறப்பான அலங்கார வடிவமைப்பு, கதவின் பேனல், மத்தியில் கன்சோல் அமைப்பு, இன்ஸ்ட்ருமென்ட் பேனல் ஆகியன சிறப்பாக உள்ளன. எலெக்ட்ரிக் சன் ரூப் வசதி, 9 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம் சொகுசு காருக்கான தோற்றத்தை அளிக்கிறது. 123 ஹெச்.பி. திறன், 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடனும், 100 ஹெச்.பி., 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடனும் இது கிடைக்கிறது. புதிய கார் அறிமுகம், முந்தைய மாடல்களுக்கு விலை குறைப்பு ஆகியன போர்டு கார்களின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது.

Comments