இந்தியாவில், 2025-ஆம் ஆண்டுக்குள் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தகவல்

இந்தியாவில், 2025-ஆம் ஆண்டுக்குள் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என ஜி.எஸ்.எம்.ஏ. அமைப்பு தெரிவித்துள்ளது. 5ஜி என்பது செல்போன்களுக்கு மட்டுமே உரிய அகண்ட அலைவரிசை தொழில்நுட்பமாகும். நம் நாட்டில் இது விரைவில் அறிமுகமாக உள்ளது. தற்போது ஆரம்ப நிலையில் உள்ள இத்தொழில்நுட்பத்திற்கான களப்பரிசோதனைகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3ஜி, 4ஜி நெட்வொர்க்குகளை விட பத்து மடங்கு அதிகமான அழைப்புகள் மற்றும் தகவல் போக்குவரத்தை கையாளும் விதத்தில் 5ஜி தொழில்நுட்பம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல் பதிவிறக்க வேகம் 4ஜி நெட்வொர்க்கை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். உலகில் தற்போது 4ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ளது. நம் நாட்டில் 2020-ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் வணிகரீதியில் 5ஜி சேவை தொடங்கி விடும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அடுத்த 6 ஆண்டுகளில் (2025-ஆம் ஆண்டுவாக்கில்) தொடர் பயன்பாட்டில் 92 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என்றும், அதில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் ஜி.எஸ்.எம்.ஏ. முன்னறிவிப்பு செய்து இருக்கிறது. இதே காலத்தில் சுமார் 100 கோடி ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டில் இருக்கும் என அந்த அமைப்பு கணித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ந் தேதி 4ஜி செல்போன் சேவையை தொடங்கியது. இந்நிறுவனத்தின் வரவு இந்திய செல்போன் துறையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. செல்போன் சேவையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வரும் இந்நிறுவனம் 5ஜி தொழில்நுட்பத்தை அறி முகம் செய்ய தயாராகி வருவதாக கூறப் படுகிறது.

Comments