வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்தது

பாரத ரிசர்வ் வங்கி நேற்று தனது நிதிக்கொள்கை முடிவுகளை அறிவித்தது. வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை இவ்வங்கி 0.25 சதவீதம் குறைத்துள்ளது. எனவே ரெப்போ ரேட் 5.75 சதவீதமாக குறைந்து இருக்கிறது. அதற்கேற்ப ரிவர்ஸ் ரெப்போ ரேட்டும் 5.50 சதவீதமாக குறைந்துள்ளது. பாரத ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இரண்டாவது முறையாக தனது நிதிக்கொள்கை ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. சக்தி கந்ததாஸ் கவர்னராக பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கை முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. அவரது தலைமையின் கீழ் 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிக்கொள்கை கமிட்டி வட்டி விகிதங்களை நிர்ணயித்துள்ளது. நிதிக்கொள்கை கமிட்டியின் 6 உறுப்பினர்களும் (சக்தி கந்ததாஸ் உள்பட) வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க வாக்களித்தனர். இந்த நிலையில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு முறையே 5.75 சதவீதம் மற்றும் 5.50 சதவீதமாக இருக்கின்றன. கடந்த 2018-ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 6-ந் தேதி அன்று வங்கி வட்டி விகிதங்கள் 4 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டது. பின்னர் ஆகஸ்டு 1-ந் தேதி மேலும் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. எனவே ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் முறையே 6.50 சதவீதம் மற்றும் 6.25 சதவீதமாக உயர்ந்தன. அக்டோபர் 5-ந் தேதி அன்று இந்த வட்டி விகிதங்கள் கூட்டப்படவோ, குறைக்கப்படவோ இல்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி அன்றும் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் பிப்ரவரி 7-ந் தேதி அன்று 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. ஏப்ரல் 5-ந் தேதி மீண்டும் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. இப்போது மேலும் 0.25 சதவீதம் குறைக்ப்பட்டுள்ளது. கடன் வட்டி விகிதங்கள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவுகளை பணவீக்கம்தான் நிர்ணயிக்கிறது. எனவே வழக்கம்போல் அது பற்றிய மதிப்பீடுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இப்பணவீக்கம், நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 3-3.1 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், இரண்டாவது அரையாண்டில் (2019 அக்டோபர்-2020 மார்ச்) 3.4-3.7 சதவீதமாக குறையும் என்றும் இவ்வங்கி தெரிவித்து இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மறுமதிப்பீடு செய்துள்ளது. முந்தைய ஆய்வறிக்கையில் அது 7.2 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாரத ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை ஆய்வறிக்கை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளியாகிறது. இவ்வங்கியின் அடுத்த ஆய்வுக் கூட்டம் ஆகஸ்டு 5-ந் தேதி தொடங்கி தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெறும். வட்டி விகிதங்கள் பற்றிய அறிவிப்பு அம்மாதம் 7-ந் தேதி (புதன்கிழமை) வெளிவரும்.

Comments