ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8, 9-ல் நடைபெறும்  தேர்வு வாரியம் அறிவிப்பு 

ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். டெட் தேர்வு இரு தாள்களைக் கொண்டது. இந்த இரு தாள்களும் தலா 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5-ம் வகுப்பு வரையும், 2-ம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் பாடம் நடத்தத் தகுதியுடையவர். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ல் தொடங்கி ஏப்ரல் 12-ம் தேதியுடன் முடிந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி முதல் தாளுக்கு ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 341 பேரும், 2-ம் தாள் எழுத 4 லட்சத்து 20 ஆயிரத்து 815 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஜூன் 8-ல் முதல் தாள் தேர்வும், 9-ம் தேதி 2-ம் தாள் தேர்வும் நடைபெறும். அடுத்த 2 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments