வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விதிக்கும் கட்டணங்கள்

குறைந்தபட்ச இருப்பு இல்லாமைக்கான கட்டணம்:

சேமிப்புக் கணக்கு களுக்கு ரூ. ஐநூறு முதல் ரூ. 10 ஆயிரம் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகையாக வங்கிகள் நிர்ணயம் செய்துள்ளன. நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. எனவே, செயல்படாத அல்லது குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க இயலாத வங்கிக் கணக்கு களின் இயக்கத்தை நிறுத்திவிடுவது நல்லது.

பணம் எடுத்தல்:

நம் கணக்கு உள்ள வங்கியைச் சாராத பிற ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தல், நாம் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தல் ஆகியவற்றின்போது வங்கிகள் நம்மிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன.

பணம் டெபாசிட் செய்தல்:

வங்கிக் கணக்கு வைத்துள்ள கிளை அல்லாத பிற கிளை வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும்போது அதற்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

காசோலைகள்:

ஒரு மாதத்துக்கு ஒரு காசோலைக்கும் மேலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படும். வெளியூர் வங்கிகளைச் சேர்ந்த காசோலைப் பரிவர்த்தனைகளுக்குத் தனியான சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

குறுஞ்செய்தி சேவைக் கட்டணம்:

நம்முடைய வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக கைபேசிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

டெபிட் கார்டு வழங்கும்போது:

தொலைந்துபோன அல்லது திருட்டுப்போன டெபிட் கார்டுகளுக்குப் பதிலாக புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்தால் அதற்கென தனியான அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வணிகப் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள்:

இணையம் வழியான வணிகப் பரிவர்த்தனைகளின்போது பொதுவாக கட்டணங்கள் விதிக்கப்படுவது இல்லை. ஆனால், நம்முடைய வங்கி அல்லாத பிற முகமை நிறுவனங்கள் மூலமாக வணிக நிறுவனங்களுக்குப் பணம் செலுத்தப்படும்போது சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது. உதாரணமாக ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாக ரெயில் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்தும்போது, குறைந்தபட்சக் கட்டணம் அல்லது செலுத்தப்படும் தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதத்தில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும்.

வெளிநாட்டுப் பண மாற்றப் பரிவர்த்தனைகள்:

கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலமாக வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால் 2 முதல் 4 சதவீதம் வரை சேவைக் கட்டணம் விதிக்கப்படுகிறது.

Comments