ஒதுக்கப்பட்ட அத்வானி

“வாழ்ந்தவன் கெட்டால் வறுக்கோடுக்கு கூட ஆகமாட்டான்” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். கிராமங்களில் அந்த காலத்தில் எல்லாம் வீடுகளில் மண்பாண்டங்களில்தான் சமையல் செய்தார்கள். சோறு பொங்குவது, குழம்பு வைப்பதெல்லாம் மண்பாண்டங்களில்தான். பெண்கள் உளுந்து, கொள்ளு போன்ற பயிறு வகைகளை மண் சட்டியில்தான் வறுப்பார்கள். தினசரி குழம்பு வைக்க பயன்படும் மண்சட்டி பயன்பாட்டுக்கு வந்து நாளாகிவிட்டாலோ அல்லது அதற்காக புது மண் சட்டி வாங்கி விட்டாலோ, ஏற்கனவே உபயோகத்தில் இருந்த அந்த சட்டியை தூக்கி வீசிவிடாமல் பயிறு வகைகளை வறுப்பதற்காக தூக்கி ஓரமாக வைத்து விடுவார்கள். ஏனெனில் அதன்பிறகு அது எப்போவதுதான் பயன்படும். அதாவது தினசரி பயன்பாட்டில் இருந்து அந்த மண்சட்டி, ஓரங்கட்டப்பட்டுவிடும். வறுப்பதற்கு பயன்படும் அதை வறுக்கோடு என்பார்கள். நல்ல நிலையில் செல்வாக்குடன் இருக்கும் ஒருவன் திடீரென்று வீழ்ச்சி அடைந்துவிட்டால், ஊரில் யாரும் அவனை கண்டுகொள்ளமாட்டார்கள். மதிப்பு, மரியாதையெல்லாம் போய்விடும். அப்படிப்பட்டவர்களைத்தான் கிராமங்களில், “வாழ்ந்தவன் கெட்டால் வறுக்கோடுக்கு கூட ஆகமாட்டான்” என்று பரிகாசத்துடனும், அதே சமயம் சற்று ஆதங்கத்துடனும் குறிப்பிடுவார்கள். இப்படிப்பட்ட ஒரு பரிதாப நிலை சில அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டு விடுகிறது. பாரதீய ஜனதா என்றால் அத்வானி; அத்வானி என்றால் பாரதீய ஜனதா என்று இருந்த ஒரு காலம் உண்டு. அப்படி செல்வாக்குடன் விளங்கிய அவருக்கு, முதுமையை காரணம் காட்டி இந்த தேர்தலில் போட்டியிட பாரதீய ஜனதா வாய்ப்பு வழங்க மறுத்துவிட்டது. ஏற்கனவே கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்த அத்வானிக்கு கடைசி கதவும் சாத்தப்பட்டு விட்டது. பாரதீய ஜனதா என்ற கோட்டையை வலுவான அடித்தளத்துடன் கட்டி எழுப்பி தேசம் முழுக்க பரவச் செய்தவர்களில் முக்கியமானவர் அத்வானி என்பதை அவரது அரசியல் எதிரிகளும் ஒப்புக்கொள்வார்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையை முன்வைத்து 1990-ல் நாடு முழுவதும் அவர் மேற்கொண்ட ரத யாத்திரைதான், பாரதீய ஜனதா நாடு முழுவதும் வளர காரணமாக அமைந்தது. குறிப்பாக தென் மாநிலங்களில் அந்த கட்சிக்கு அறிமுகம் கிடைத்தது. 4 முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், 7 முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ள 91 வயதான அத்வானி, மத்திய மந்திரியாகவும், வாஜ்பாய் அரசில் துணை பிரதமராகவும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்து இருக்கிறார். பாரதீய ஜனதாவில் தலைவர் பதவி உள்பட பல பதவிகளை வகித்துள்ளார். பழுத்த அரசியல்வாதியான அத்வானி 1941-ம் ஆண்டு 14-வது வயதிலேயே தன்னை ஜனசங்கத்தில் இணைத்துக்கொண்டவர். அதில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர் அரசியலில் படிப்படியாக வளர்ந்தார். 1975-ல் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தியதை தொடர்ந்து, நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டது. நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்களெல்லாம் ஓரணியில் திரண்டனர். அப்படி பாதிக்கப்பட்ட இந்திய சோசலிஸ்டு கட்சி, லோக்தளம், ஜனசங்கம் உள்ளிட்ட சில கட்சிகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய கட்சிதான் ஜனதா. நெருக்கடி நிலையை தொடர்ந்து 1977-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றதையடுத்து, மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையில் புதிய அரசு அமைந்தது. அந்த ஜனதா அரசில் அத்வானி தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மந்திரியாக இருந்தார். அதன்பிறகு தலைவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஜனதா கட்சி உடைந்து நெல்லிக்காய் மூட்டையாக சிதறியது. ஜனதாவில் இருந்து வெளியேறிய ஜனசங்கம் பாரதீய ஜனதா என்ற நாமகரணத்துடன் வாஜ்பாய் தலைமையில் புதிய அவதாரம் எடுத்தது. பாரதீய ஜனதாவை உருவாக்கியதில் அத்வானியின் பங்கு முக்கியமானது என்பதால், கட்சியில் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த நிலையில், இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகு 1984-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இந்திராகாந்தியின் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையில் எதிர்க்கட்சிகள் அடித்துச் செல்லப்பட்டன. பாரதீய ஜனதாவுக்கு வெறும் 2 இடங்களே கிடைத்தன. அதன்பிறகு ராமஜென்ம பூமி விவகாரத்தில் பாரதீய ஜனதா கூடுதல் கவனம் செலுத்தியது. இந்த நிலையில் 1989-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டதால், 87 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாவின் ஆதரவுடன் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு அமைந்தது. அதன்பிறகு 1990-ல் அயோத்தி ராமர் கோவில் பிரச்சினையை முன்வைத்து அத்வானி குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் தொடங்கி இந்தியா முழுவதும் ரதயாத்திரை மேற்கொண்டார். அத்வானியின் ரத யாத்திரை மத கலவரத்துக்கு வழிவகுக்கும் என்று கூறி, பீகார் மாநிலத்தில் அவரது ரத யாத்திரையை அப்போது முதல்-மந்திரியாக இருந்த லாலு பிரசாத் தடுத்து நிறுத்தினார். 2 ஆண்டுகள் அத்வானி மேற்கொண்ட இந்த ரத யாத்திரை அவரது செல்வாக்கு அதிகரிக்கவும், பாரதீய ஜனதா வளர்ச்சி அடையவும் பெரிதும் உதவியது. இதன் விளைவாக, 1996-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 161 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. (அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை) இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் பாரதீய ஜனதாவை வளர்த்ததில் அத்வானியின் பங்கு மிகவும் முக்கியமானது ஆகும். பாரதீய ஜனதாவில் தேசிய அளவில் அத்வானியின் செல்வாக்கு ஏறுமுகமாக இருந்த நிலையில், குஜராத்தில் பாரதீய ஜனதா முதல்-மந்திரியாக இருந்த மோடி அந்த மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். குஜராத்தில் பாரதீய ஜனதாவுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கிய அவரது பார்வை தேசிய அரசியல் பக்கம் திரும்பியது. மோடி தேசிய அரசியலுக்கு வந்தது, அத்வானியின் வீழ்ச்சிக்கு வழி வகுப்பதாக இருந்தது. குஜராத்தில் தனது அரசில் மந்திரியாக இருந்தவரும், தனக்கு வலது கரமாக விளங்கியவருமான அமித்ஷாவின் உதவியுடன் தேசிய அரசியலில் கால் பதித்த மோடி, கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கிட்டத்தட்ட கட்சியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். அந்த தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்தியே பாரதீய ஜனதா தேர்தலை சந்தித்தது. வேட்பாளர் தேர்வு, பிரசாரம் என்று அனைத்திலும் மோடியின் கையே ஓங்கி இருந்தது. அத்வானியின் முக்கியத்துவம் கட்சியில் படிப்படியாக குறைந்து வந்தது. அந்த தேர்தலுக்கு முன் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந் தேதி பாரதீய ஜனதாவின் பிரசார குழு தலைவராக மோடி நியமிக்கப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, யாரும் எதிர்பாராத வகையில் கட்சியில் தான் வகித்து வந்த அனைத்து பதவிகளையும் அத்வானி ராஜினாமா செய்தார். ஆனால் கட்சியில் பல்வேறு தரப்பில் இருந்தும் வற்புறுத்தல்கள் வந்ததை தொடர்ந்து, மறுநாளே அவர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இப்படியாக அத்வானிக்கும், மோடிக்கும் இடையேயான மோதல் நீறு பூத்த நெருப்பாகவே இருந்தது. அந்த தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆனதும், அத்வானிக்கு அரசில் முக்கிய பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மோடி அவரை ஒதுக்கி வைத்துவிட்டார். அப்போது, பாரதீய ஜனதாவில் ‘மார்க் தர்ஷக் மண்டல்’ என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட வழிகாட்டும் குழுவில் வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகியோருடன் அத்வானியும் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2017-ல் ஜனாதிபதி தேர்தல் வந்தது. பாரதீய ஜனதா சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வெற்றி உறுதி என்ற நிலையில், அத்வானிக்கு ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை மோடி வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக, பீகார் மாநில கவர்னராக இருந்த ராம்நாத் கோவிந்தை ராஜினாமா செய்ய வைத்து, அவரை வேட்பாளராக நிறுத்தி ஜனாதிபதியாக்கி விட்டார் மோடி. ஆக, தேசிய அரசியலில் மோடி தலை தூக்கியதில் இருந்து அத்வானியின் அரசியல் வாழ்க்கை படிப்படியாக மங்க தொடங்கியது. இந்த தேர்தலில், முதுமையை காரணம் காட்டி அவரை கழற்றிவிட்டு விட்டார்கள். அத்வானிக்கு மட்டுமா இந்த நிலை? அவரைப்போன்ற கட்சியின் மூத்த தலைவர்களான முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, அருண் ஜெட்லி, சாந்த குமார், பி.சி.கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா, ஷாநவாஸ் உசேன், ரமேஷ் பயஸ், சுமித்ரா மகாஜன், ராஜன் கோகெய்ன், பிஜோயா சக்ரவர்த்தி போன்றோரும் இந்த ஒதுக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். 75 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவது இல்லை என்ற அடிப்படையில் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று பாரதீய ஜனதா தரப்பில் கூறப்படுகிறது. இந்த 75 வயது வரையறைக்குள் வந்துவிட்ட சிலர், தங்களுக்கு சீட் கிடைக்காது என்று கருதி, கட்சி தலைமையின் மன ஓட்டத்தை அறிந்து, தாங்கள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று தாமாகவே ஒதுங்கிவிட்டனர். அப்படி ஒதுங்கியவர்களில் தற்போது நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் 76 வயதான சுமித்ரா மகாஜன், 85 வயதான சாந்தகுமார் எம்.பி. ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சுமித்ரா மகாஜன் மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் இருந்து, 30 ஆண்டுகளில் தொடர்ந்து 8 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இமாசலபிரதேச முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள சாந்தகுமார், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அங்குள்ள கங்க்ரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஏற்கனவே அந்த தொகுதியில் 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். இமாசலபிரதேசத்தில் பாரதீய ஜனதா வலுவாக காலூன்றியதில் சாந்தகுமாருக்கு முக்கிய பங்கு உண்டு. உடல் நிலையை காரணம் காட்டி விலகிக் கொண்டவர் பி.சி.கந்தூரி. உத்தரகாண்ட் மாநிலத்தில் இரு முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ள இவர், வாஜ்பாய் ஆட்சியின் போது வெளியுறவு மந்திரியாக இருந்துள்ளார். காய்கள் ருசிப்பதில்லை, நன்றாக கனிந்த பழங்கள்தான் இனிக்கின்றன. வயதாக வயதாகத்தான் தேக்கு மரத்தின் உறுதித்தன்மையும், மதிப்பும் அதிகரிக்கிறது. உடல் நலமும், மனநலமும் நன்றாக இருப்பவர்களை முதுமையை காரணம் காட்டி ஒதுக்கி வைப்பது அவர்களை புண்படுத்துவதோடு மட்டுமின்றி, அப்படிச் செய்பவர்களுக்கும் ஓர் இழப்பாகவே இருக்கும். முதுமையின் அனுபவ அறிவும், இளமையின் செயலாக்க வேகமும் சேரும்போதுதான் மகத்தான சாதனைகள் உருவாகும். இந்த தேர்தலில் பாரதீய ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால், அத்வானி தொடர்ந்து முக்கியத்துவம் இழந்த நிலையிலேயே இருப்பார். முடிவு நேர் மாறாக இருந்தால், மோடியை நோக்கி கணைகள் பாயும். கட்சியில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அத்வானியின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதா? அல்லது பீனிக்ஸ் பறவையைப் போல் அவர் மீண்டும் எழுந்து வருவாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

Comments