‘மிஷன் சக்தி’ திட்டம் இந்திய விண்வெளி சாதனையில் ஒரு மைல்கல் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பாராட்டு

விண்வெளியில் செயற்கைகோளை இந்திய சுட்டு வீழ்த்தியது பற்றி, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:- பூமியின் கீழ் சுற்றுவட்ட பாதையில் செயற்கைகோளை 300 கி.மீ. உயரத்தில் ராக்கெட் மூலமாக சுட்டு வீழ்த்துவது ‘மிஷன் சக்தி’ திட்டம் ஆகும். எதிரி நாட்டு செயற்கைகோள் உளவு பார்க்க வந்தால் அதை சுட்டு வீழ்த்தும் வல்லமை இந்தியாவுக்கு ‘மிஷன் சக்தி’ திட்டத்தின் பலனாக கிடைத்துள்ளது. எதிரி நாட்டு ஏவுகணை அணுகுண்டை சுமந்து வந்தாலும், அதை வான்வெளியில் தாக்கி அழிக்கும் திட்டம் 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ‘மிஷன் சக்தி’ திட்டம் இந்திய விண்வெளி சாதனையில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது. செயற்கைகோள் பூமியோடு சேர்ந்து பயணப்படும். ஒரு மணி நேரத்துக்கு 28 ஆயிரத்து 80 கி.மீ. தொலைவு பூமியை சுற்றும் வல்லமை கொண்டது. இதன் மூலம் துல்லியமாக தாக்கி அழிப்பதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் மிகவும் வல்லமை பெற்றிருப்பது நிரூபணம் ஆகிறது. இது தொடர் சாதனை ஆகும். இந்த வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments