‘பானி’ புயல் அதி தீவிரமடைகிறது கடலோர பகுதிகளில் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

‘பானி’ புயல் அதி தீவிரமடைவதால் கடலோர பகுதிகளில் 70 கி.மீ. வேகம் வரை காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கோடைகாலம் வாட்டி வதைத்து வருகிறது. பருவமழையும் ஏமாற்றியது, கோடைமழையும் ஏமாற்றி வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி இருக்கிறது. தண்ணீரின் தேவையை அறிந்து செலவு செய்யும் முனைப்பில் மக்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் கடந்த 25-ந் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி இருக்கிறது. அந்த புயலுக்கு ‘பானி’ என்று பெயர் சூட்டப்பட்டது. இது முதலில் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது புயல் திசைமாறி செல்கிறது. இதனால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும், எதிர்பார்த்த மழையும் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது ‘பானி’ புயலின் நிலை எப்படி இருக்கிறது? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 870 கி.மீ. தொலைவில் ‘பானி’ புயல் நிலைகொண்டு உள்ளது. இது தொடர்ந்து தீவிர புயலாகவும், நாளை (இன்று) அதி தீவிர புயலாகவும் வலுப்பெற கூடும். இது வருகிற மே 1-ந் தேதி (நாளை) வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கரைகளுக்கு அருகில் 300 கி.மீ. தொலைவு வரை வந்து, பிறகு வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லக்கூடும். ஏப்ரல் 30, மே 1-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக கடற்கரை பகுதிகளில் நாளை (இன்று) காலை மணிக்கு40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசும். சில சமயம் 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். நாளை (இன்று) மாலை 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், சில சமயத்தில் 70 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். ஏப்ரல் 30, மே 1-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்கள் வருகிற 30 மற்றும் மே 1, 2-ந் தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments