2-வது பெரிய வங்கியானது பாங்க் ஆஃப் பரோடா

தேனா வங்கி, விஜயா வங்கிகள் இணைப்பு 2-வது பெரிய வங்கியானது பாங்க் ஆஃப் பரோடா கிளைகள் மூடல் இல்லை, ஊழியர் குறைப்பும் கிடையாது பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடாவுடன் மற்ற இரண்டு வங்கிகளான தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இணைக்கப் பட்டன. இதையடுத்து பொதுத் துறை வங்கி களில் அதிக முதலீடு கொண்ட இரண்டாவது பெரிய வங்கியாக பாங்க் ஆஃப் பரோடா உருவாகியுள்ளது. இதுகுறித்து பாங்க் ஆஃப் பரோடாவின் பொது மேலாளர் ராஜேஷ் மல்ஹோத்ரா கூறிய தாவது: ஏப்ரல் 1-ம் தேதி முதல் மூன்று வங்கி களும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதனால் பாங்க் ஆஃப் பரோடா கையாளும் மொத்த நிதியின் அளவு ரூ.15 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதில் வழங்கப்பட்ட கடன் அளவு ரூ. 8.75 லட்சம் கோடியாகவும், சேமிப்பு ரூ. 6.25 லட்சம் கோடியாகவும் உள்ளது. 85 ஆயிரம் ஊழியர்கள் பாங்க் ஆஃப் பரோடா வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 9,500 ஆகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 13,400 ஆகவும் உயர்ந்துள்ளன. இதேபோல ஊழியர்களின் எண்ணிக்கை 85 ஆயிரமாகவும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12 கோடியாகவும் உள்ளது. இணைப்புக்குப் பிறகு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட மாட்டாது. அதேபோல உடனடியாக கிளைகளை மூடும் நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. விஜயா வங்கி, தேனா வங்கியில் உள்ள பணியாளர்களின் தகுதி, செயல்பாடு இவற்றுக் கேற்ப அவர்களுக்கு பதவி வழங்கப்படும். ஏற்கெனவே வகுத்தளிக்கப்பட்ட நடைமுறை களின்படி பாங்க் ஆஃப் பரோடாவின் பங்குகள் தேனா வங்கி மற்றும் விஜயா வங்கியின் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டு இப்போது ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. விஜயா வங்கியின் பங்குதாரர்கள் 1,000 பங்குகளுக்கு பாங்க் ஆஃப் பரோடாவின் 402 சம பங்குகளை பெற்றனர். இதேபோல தேனா வங்கி பங்குதாரர்கள் 1,000 பங்குகளுக்கு 110 சம பங்குகளை பெற்றுள்ளனர். இணைப்புக்குப் பிறகு குஜராத் மாநிலத் தில் இவ்வங்கி 22 சதவீத சந்தையைக் கொண் டிருக்கும். மகாராஷ்டிர, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் 8 முதல் 10 சதவீத சந்தையைக் கொண்டிருக்கும். தேனா வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆர்பிஐ வகுத்தளித்த பிசிஏ வழிகாட்டுதலின் படி பாங்க் ஆஃப் பரோடாவின் அனைத்து சலுகைகளையும் விஜயா வங்கி, தேனா வங்கி வாடிக்கையாளர்கள் பெற முடியும். வங்கியின் ஒட்டுமொத்த வாராக் கடன் 6.5 சதவீதமாக உள்ளது. இதைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இனி பாங்க் ஆஃப் பரோடா என்ற பெயரில் அழைக்கப்படும் என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூன்று வங்கிகளை இணைக்கும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. இம்மூன்று வங்கிகளும் இணைக்கப்பட்ட பிறகு பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆகக் குறைந்துள்ளது.

Comments