‘ஆண்ட்ராய்டு கியூ’ இயங்குதளத்தில் புதிய வசதிகள்

கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான், தற்போதைய ஸ்மார்ட்போன்களின் உயிர்நாடியாக உள்ளது. உலகின் அதிகப்படியான மொபைல்களை இயக்கும் ஆண்ட்ராய்டு தளத்தின் புதிய பதிப்பாக ஆண்ட்ராய்டு கியூ அறிமுகமாகி உள்ளது. இந்த இயங்குதளத்தில் செயல்படும் ‘பீட்டா-1’ ஸ்மார்ட்போன் சமீபத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு கியூவில் பல்வேறு பயனுள்ள வசதிகளும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. அவை பற்றிய சிறு பார்வை...

புதிய இயங்குதளம்

ஆண்ட்ராய்டு கியூ அறிமுகமாகும் முன்பே அது பற்றிய பல்வேறு தகவல்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் இருந்தன. ஏராளமான வசதிகள் கொண்ட இந்த புதிய இயங்குதளம் 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் இந்த இயங்குதளத்துடன்கூடிய பீட்டா 1 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்து எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. செல்போனின் ஆயுள், வேகம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் முக்கியத்துவம் கொண்டதாக பேசப்படுகிறது ஆண்ட்ராய்டு கியூ.

இடத்திற்கேற்ப வசதிகள்

இந்த இயங்குதளத்தின் சிறப்புகளில் ஒன்று ‘லொக்கேசன்’ வசதி. சில போன்களில் நீங்கள் இருக்கும் இடத்தை தானாக காட்டிக் கொடுக்கும் லொக்கேசன் வசதி எப்போதும் செயல்பாட்டில் இருக்கும். ஆண்ட்ராய்டு கியூ தளத்தில் உங்கள் பாதுகாப்பு கருதி அந்த வசதியை இன்னும் மேம்படுத்தி வழங்கியிருக்கிறார்கள். எந்த அப்ளிகேசனுக்கு லொக்கேசன் வசதி தேவையோ அந்த அப்ளிகேசனை திறக்கும்போது மட்டும் லொக்கேசன் வசதி செயல்படும் வகையில் இதில் பதிவு செய்ய முடியும். அப்ளிகேசனை மூடிவிட்டால் லொக்கேசன் வசதியும் செயல்படுவதில்லை.

கோப்புகளை பரிமாற

தகவல்களை பரிமாறவும் சிறப்பு வசதிகள் உள்ளன. கூடுதல் ஷேரிங் அப்ளிகேசன்கள் இருப்பதுடன், வேகமான பரிமாற்றத்திற்கும் இயங்குதளம் சிறப்பான ஒத்துழைப்பு தரும். ‘காப்பி’ செய்யப்படும் யூ.ஆர்.எல். லிங்க், மெனுவில் காட்டப்படும் என்பதால் தேவைப்பட்டால் அதை நகல் எடுத்து அனுப்பவும் முடியும்.

பேட்டரி எச்சரிக்கை

பேட்டரி சக்தி எவ்வளவு இருக்கிறது என்பது இதுவரை திரையின் ஒரு முகப்பில் எப்போதும் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். ஆண்ட்ராய்டு கியூ தளத்தில் இந்த வசதி மாற்றப்பட்டிருக்கிறது. பேட்டரி தீர்வதற்கு சிறிது அவகாசம் இருக்கும்போது, இன்னும் எவ்வளவு நேரத்திற்கு பேட்டரி சக்தி நீடிக்கும் என்பது எழுத்து (டெக்ஸ்ட் ) மூலம் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். பயனாளர் அதை கவனிக்கும் வரை காட்டப்படும். சார்ஜிங் செய்யாதபோது குறித்த இடைவேளைகளில் மீண்டும் நினைவூட்டவும் செய்யும்.

முக்கிய தகவல்களுக்கு வண்ணம்

அப்ளிகேசன்களின் லோகோக்கள் பல வண்ணங்களிலும், அடையாளங்களிலும் காணப்படுவதுபோல தீம்களையும் பல வண்ணங்களில் தருகிறது ஆண்ட்ராய்டு கியூ. நீங்கள் செட்டிங்ஸ் சென்றாலோ அல்லது ஒவ்வொரு வசதியின் உள்ளே சென்றாலும், அதன் முக்கிய கருத்துகள் வெவ்வேறு வண்ணங்களில் காட்டப்படும். இது முக்கிய தகவல்களை கருத்தூன்றி கவனிக்கவும், பயன்படுத்தவும் வசதியாக இருக்கும்.

வைபை பாஸ்வேர்டு தேவையில்லை

திடீரென இணைய டேட்டா தீர்ந்துபோனால், நட்புக்குரியவரிடம் பாஸ்வேர்டு கேட்டு இணைப்பு கொடுத்து பயன்படுத்துவோம். பொது இடத்தில் பாஸ்வேர்டை கேட்டுக் கொண்டிருப்பதும், கொடுப்பதும் பாதுகாப்பானதல்ல. இந்த பிரச்சினையை தீர்த்திருக்கிறது ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளம். இதில் வைபை இணைப்பு கொடுக்க பாஸ்வேர்டு தேவையில்லை. அதனால் பாதுகாப்பு இல்லாமல் உங்கள் வைபை பயன்படுத்தப்படுமோ என்று அச்சப்பட வேண்டாம். கியூ.ஆர். கோடு மூலமாக ஸ்கேன் செய்து இரு போன்களுக்கு இடையே எளிமையாக வைபை இணைப்பு கொடுக்கலாம்.

படங்களிலும் சிறப்பு வசதி

செல்பிகளிலும், புகைப்படங்களிலும் மகிழ்ச்சி கொள்ளும் இளைய தலைமுறையினரை கவரும் விதத்தில் படங்கள் எடுக்கும் வசதியிலும் நவீனங்களை புகுத்தியிருக்கிறது ஆண்ட்ராய்டு கியூ. படம் பிடிக்கும் கேமராவுக்கும், பொருளுக்கும்/ உங்களுக்குமான இடைவெளியை காட்டுவதுடன், எவ்வளவு நெருக்கம் இருந்தால் இன்னும் தெளிவான சிறப்பான படத்தை எடுக்கலாம் என்பதையும் காட்டும் வசதி இதில் உள்ளது. இதர புகைப்பட அப்ளிகேசன்களுடன் இணைந்தும் இந்த வசதி செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இசைப் பிரியர்களுக்கு

புகைப்படங்களுக்கு, அடுத்தபடியாக பலரையும் மகிழ்விப்பது, இசையும், வீடியோ காட்சிகளும்தான். யூடியூப் சென்றோ அல்லது படங்களை பதிவிறக்கம் செய்தோ வீடியோ காட்சிகளை பார்த்தால் வேகமாக சார்ஜ் தீர்ந்துவிடும். இதில் சிறப்பம்சமாக குறைந்த அலைக்கற்றையில் தரமான வீடியோவை பதிவு செய்யவும் கேட்கவும் முடியும் என்பதால் குறைந்த பேட்டரி சார்ஜில் நிறைவான இசை மற்றும் காட்சிகளை ரசிக்க முடியும்.

அப்ளிகேசன் அலெர்ட்

அப்ளிகேசன்களை பதிவிறக்கம் செய்யும்போதும், பயன்படுத்தும்போதும் பல்வேறு நோட்டிபிகேசன் குறிப்புகள் வருவதை கவனிக்கலாம். முந்தைய ஆண்ட்ராய்டு போன்களில் நோட்டிபிகேசன்களை தடுக்கவும், காட்டவும் வசதி உண்டு. ஆண்ட்ராய்டு கியூ பதிப்பில் நோட்டிபிகேசன்களை தடுக்கவும், அமைதியாக காண்பிக்கவும், அச்சுறுத்தும் நோட்டிபிகேசன்களை தனியே காட்டவும் வசதிகள் உள்ளன. ஒவ்வொரு அப்ளிகேசனின் மீதும் நோட்டிபிகேசன்கள் எண்களாக காட்டப்படும். அப்ளிகேசன் ஐகான்களை தொடர்ந்து அழுத்துவதன் (லாங்பிரஸ்) மூலம் நோட்டிபிகேசன்களை பார்க்க முடியும்.

Comments