ஜிமெயில் பயனுள்ள புதிய வசதிகள்!

கருத்து பகிர்வு, தகவல் பரிமாற்றத்திற்காக எத்தனையோ சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டாலும், ஜிமெயில் பயன்பாடு தவிர்க்க முடியாததாக விளங்குகிறது. காலத்திற்கேற்ப கூடுதல் வசதிகளையும் ஜிமெயில் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பல்வேறு புதிய வசதிகள் ஜிமெயிலில் சேர்க்கப்பட்டு உள்ளது. குறிப்பாக முக்கியமான ஷாட்கட் வசதிகள் அறிமுகமாகி இருப்பது அனைவரும் அறிய வேண்டியது. ஜிமெயிலின் சில புதிய வசதிகளை அறிவோமா? புதிய மெயில்களை உருவாக்கி அனுப்ப உதவும் ‘கம்போஸ்’ மற்றும் ‘டிராப்ட்’, ‘சென்ட் மெயில்’ போன்ற வசதிகளை எளிதாக பயன்படுத்த ஷாட்கட் விசைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மவுஸ் மற்றும் டிராக்பேடு உதவியுடன் இவற்றை தேடிக் கொண்டிருக்காமல் உடனடியாக இந்த விசைகளை சொடுக்கி இந்த வசதிகளை பயன்படுத்தலாம். அல்ட் பொத்தானுடன் சேர்த்து அம்புக்குறிகளை இயக்குவது மற்றும் கண்ட்ரோல் பொத்தானுடன் 1 முதல் 9 வரையிலான எண் விசைகள் மற்றும் டேப் விசையை பயன்படுத்துவது போன்றவற்றில் ஏராளமான ஷாட்கட் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உதாரணமாக உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும் அனைத்து மெயில் முகவரிகளுக்கும் பொதுவான ஒரு தகவலை அனுப்ப வேண்டுமானால் கண்ட்ரோல், சிப்ட், டி(d) விசைகளை சேர்த்து இயக்கினால் போதும். இதேபோல ஒருவருக்கு பதிலளிக்கும் ரிப்ளை வசதியையும், மற்றவருக்கு அந்த தகவலை அனுப்பும் ‘பார்வர்டு’ வசதியையும் மவுஸ் மூலமாக தேடிக் கொண்டிருக்க வேண்டாம். ரைட்கிளிக் வசதிகளில் இந்த இரு ஆப்சன்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. தகவல்களின் இடையே படங்கள், குறியீடுகளை சேர்க்க, ‘ஆடு லேபிள்’ வசதியும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் குறிப்பிட்ட மெஸேஜ்களை ஒன்றாக சேர்த்து வைக்க பண்டல் வசதியும், நினைவூட்டும் ரிமைண்டர் வசதியும் சேர்க்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது கூகுள். ஜிமெயிலின் இந்த வசதிகளை செயல் படுத்த உங்கள் ஜிமெயில் கணக்கை புதிய பதிப்புக்கு ‘அப்டேட்’ செய்து கொண்டால் போதும்.

Comments