மோசமான பதிவுகளை வெளியிட்ட டிக்டாக் கணக்குகள் முடக்கம் அமைச்சர் மணிகண்டன் தகவல்

மோசமான பதிவுகளை வெளியிட்ட டிக்டாக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். செயலி தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதால் டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வைத்த கோரிக்கையை ஏற்று அதனை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தேன். அதன்படி அந்த செயலியை உடனே தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே புளூவேல் என்ற உயிரை பறிக்கக்கூடிய ஆபத்தான விளையாட்டு தடை செய்யப்பட்டது போல இதுவும் தடை செய்யப்படும். இதற்கிடையே டிக்டாக் சமூக வலைத்தள நிறுவனமே தாமாக முன்வந்து அதிலுள்ள மோசமான பதிவுகளை அகற்றி விட்டு அந்த கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. உறுதி காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானது கடும் கண்டனத்திற்கு உரியது. காஷ்மீர் மாநிலத்தில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை முன் உதாரணமாக கொண்டு இந்தியா முழுவதும் பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments