தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட  அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு வேண்டுகோள்

தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக் கைகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் நேற்று கோட்டையில் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகி யோரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 9 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற பல்வேறு ஜனநாயக நடவடிக்கைகளை மேற்கொண்டும் தீர்வு எட்டப்படாத நிலையில்தான் ஜனவரி 22 முதல் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டது. முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில்தான் போராட்டத்தில் ஈடுபட்டோம். முதல்வர் எங்கள் அமைப்பை அழைத்துப் பேசினாலே எங்களின் கோரிக்கை கள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில்தான் அவர் எங்களை அழைத்துப்பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இந்நிலையில், அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டு கோளை ஏற்று, ஜனவரி 30-ம் தேதி போராட் டத்தை முடித்துக்கொண்டு உடனடியாக பணிக்கு திரும்பினோம். ஆனால், முதல்வரின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், எந்த நோக்கத்துக்காக வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டதோ அந்த நோக்கத்தை சிதைக் கும் வகையிலும் மாணவர்கள் நலன் மற்றும் மக்களின் நலனில் அக்கறையற்று வேலை நிறுத்தக்காலம் நீடிப்பது போன்ற தோற்றத்தை அரசு அதிகாரிகள் ஏற்படுத்தியுள்ளனர். நியாயமான கோரிக்கைகளுக்காகத்தான் போராடினோம் என்ற அடிப்படை நியாயங் களை முதல்வர் மறுக்காமல், தமிழகத்தின் நிதிநிலையை குறிப்பிட்டு, தற்போது இயலாத நிலையை தெரிவித்து, ‘ஜெயலலி தாவின் அரசு, அரசு ஊழியர்கள் நலன் காக் கும் அரசு’ என்று கூறியுள்ளார். இந்நிலையில், போராட்டத்தின்போது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை யும், எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை யும், தற்காலிக பணிநீக்க நடவடிக்கையையும் திரும்பப்பெற்று அரசுக்கும் அரசு ஊழியர் களுக்கும் இடையிலான உறவை சுமுகமாக்கி பணித்திறன் மேம்பட உதவுமாறு முதல்வரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Comments