ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் தவறு என்று தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் கடந்த 3-ம் தேதி இந்திய அறிவியல் மாநாடு தொடங்கியது. இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் தமிழகத்தின் ஆழியாறில் செயல்படும் உலக சமுதாய சேவா மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் கடந்த 4-ம் தேதி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:
புவிஈர்ப்பு எதிர்விசை குறித்து ஐசக் நியூட்டனிடம் விஞ்ஞானிகள் கேட்டபோது அவரிடம் இருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. ஏனென்றால் புவிஈர்ப்பு எதிர்விசையை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவரது கணிதங்கள் சரியாக உள்ளன. ஆனால் அவரது இயற்பியல் கோட்பாடுகளில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. அந்த குளறுபடிகளுக்கு என்னால் தீர்வு காண முடியும்.
சூரியன் மற்றும் இதர கிரகங்களைவிட அண்டவெளி அடர்த்தியானது. அனைத்து கிரகங் களுக்கும் அண்டவெளி சரிசமமான அழுத்தத்தைக் கொடுக்கிறது. அதனால்தான் கிரகங்கள் நகர்கின்றன. இதனை நியூட்டன், ஐன்ஸ்டீனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வகையில் ஐன்ஸ்டீன் உலகத்துக்கு சரியான பாதையைக் காட்டவில்லை.
ஐன்ஸ்டீன் மேதாவியாக இருந்தாலும் மிகப் பெரிய தவறுகளை செய்துள்ளார். அவரது E=MC2 கோட்பாடு முற்றிலும் தவறானது. அவரின் அனைத்து கோட்பாடுகளையும் நான் மாற்றியமைக்கப் போகிறேன். எனது ஆய்வறிக்கைகளை 40 நாடுகளுக்கு அனுப்பியுள்ளேன்.
கருந்துளை கோட்பாடு தொடர்பாக இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் கூறிய கருத்துகள் தவறானவை. இதை சுட்டிக் காட்டி கடந்த 2017-ம் ஆண்டில் அவருக்கு இ-மெயிலும் அனுப்பியுள்ளேன். இந்து புராண வேதங்களில் இதற்கெல்லாம் விடை இருக்கிறது.
பனிமலைகளில் இருந்து உருகி ஓடும் தண்ணீர் தரையை நோக்கிப் பாய்கிறது. புவிஈர்ப்பு விசை இருக்கும் என்றால் அந்த தண்ணீரை பூமி ஏன் ஈர்க்கவில்லை. புவிஈர்ப்பு விசை குறித்து இப்போது கூறப்படும் விளக்கம் சரியானது கிடையாது.
எனது ஆய்வறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் புவிஈர்ப்பு விசைக்கு 'நரேந்திர மோடி அலைகள்' என்றும் ஈர்ப்பு விசை ஒளி விளைவுக்கு 'ஹர்ஷவர்தன் விளைவு' என்றும் பெயர் சூட்டுவேன். எதிர்காலத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைவிட மிகப்பெரிய விஞ்ஞானியாக அமைச்சர் ஹர்ஷவர்தன் உருவெடுப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.குரு டாக்டர் சத்யமூர்த்தி புகழாரம்
கண்ணன் ஜெகதளா கிருஷ்ணனின் குரு டாக்டர் சத்யமூர்த்தி உதகையை சேர்ந்தவர். வேதாத்திரி மகரிஷியின் தொண்டரான இவர் மூத்த யோகா மாஸ்டராக உள்ளார். உலக சமுதாய சேவா இயக்கத்தின் மூத்த பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது சீடரான கண்ணன் ஜெகதளா கிருஷ்ணன் குறித்து கேட்ட போது, ‘மெகானிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு படித்த கண்ணன், ஆஸ்திரேலியாவில் எம்.எஸ். படித்தார். அங்கேயே எம்பிஏ முடித்து, இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகளாக இயற்பியலில் Unified Force (Vethon) குறித்து ஆய்வு செய்து, தற்போது இந்திய அறிவியல் மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். Unified Force (Vethon) என்பது இயற்பியலில் மிகப் பெரிய துறை. சாமானியர்கள் புரிந்துக்கொள்வது கடினம். இயற்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்’ என்றார்.
Facebook
Google
Twitter
EmailShare
© 2017 All Rights Reserved. Powered by Summit exclusively for The Hindu
No comments:
Post a Comment