சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழா: “புத்தகங்கள் படித்து நல்ல மனிதர்களாக மாறியவர்கள் அதிகம்” முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

“புத்தகங்கள் படித்து மேதை ஆனவர்களை விட நல்ல மனிதர்களாக மாறியவர்கள் அதிகம்” என்று, சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின்(பபாசி) 42-வது சென்னை புத்தக கண்காட்சி தொடக்க விழா சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் பபாசி தலைவர் எஸ்.வயிரவன் வரவேற்புரையாற்றினார். தொழில் அதிபர் நல்லி குப்புசாமி தலைமை தாங்கினார். புத்தக கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பக செம்மல் க.கண்பதி விருதை முல்லை பழனியப்பனுக்கும், சிறந்த பெண் எழுத்தாளருக்கான அம்சவேணி பெரியண்ணன் விருது ஜி.திலகவதிக்கும், சிறந்த விற்பனையாளருக்கான பதிப்பு செம்மல் ச.மெய்யப்பன் விருது ஹிக்கின்பாதம்சுக்கும், சிறந்த சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது கோவி.பழநிக்கும், பபாசி-சிறந்த நூலகர் விருது ச.இளங்கோ சந்திரகுமாருக்கும், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா விருது சபீதா ஜோசப்புக்கும், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது க.ப.அறவாணனுக்கும், சிறந்த ஆங்கில எழுத்தாளருக்கான ஆர்.கே.நாராயண் விருது காயத்ரி பிரபுவுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மறைந்த அறவாணனுக்கான விருதை அவரது மகன் அறிவாளன் பெற்றுக்கொண்டார். விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ஆண்டுக்கு ஆண்டு புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதால், இப்படிப்பட்ட புத்தகக் கண்காட்சிகளின் தேவையும் அதிகரிக்கத்தான் செய்யும். இப்படிப்பட்ட புத்தக கண்காட்சிகள் மூலம் தமிழ்நாடு அறிவு சார் மாநிலம் என்பதை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. நமது மூதாதையர் அறிவையும், அனுபவத்தையும் ஆவணப்படுத்தி நமக்கு சொத்தாக வழங்கி செல்வது நூல்கள்தான். மாற்றத்துக்கும், ஏற்றத்துக்கும்... பிள்ளைகள் பெற்றோர் செய்வதைப் பார்த்து மிகுதியாகக் கற்றுக் கொள்கிறார்கள் எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கக் கூடும். நூல்களை படித்து மேதையானவர்களைவிட, நல்ல மனிதர்களாக மாறியவர்கள் அதிகம். எனவே மாற்றத்துக்கும், ஏற்றத்துக்கும் நூல் வாசிப்பது மிக மிக அவசியம் என்பதை உணருங்கள். அண்ணாவின் வழியில் வந்த எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட நாங்கள் எப்போதும் படைப்பாளர்கள் பக்கமும், படிப்பாளிகளின் பக்கமும்தான் இருப்போம் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Comments