மைக்ரோசாட், கலாம்சாட் செயற்கைக் கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி44

இந்திய ராணுவப் பயன்பாட்டுக்கு உதவும் மைக்ரோசாட் - ஆர், மாணவர்கள் தயாரித்த கலாம்சாட் ஆகிய 2 செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய எல்லைப் பகுதி கண்காணிப்பு உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான ‘மைக்ரோசாட் - ஆர்’ என்ற நவீன இமேஜிங் செயற்கைக் கோளை இஸ்ரோ உருவாக்கியது. இதனுடன், தமிழக மாணவர்கள் தயாரித்த நானோ வகை ‘கலாம்சாட்’ செயற்கைக் கோளையும் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. இந்த 2 செயற்கைக் கோள்களையும் பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தில் கடந்த ஒருவாரமாக மும்முரமாக நடந்து வந்தன. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 28 மணி நேர கவுன்ட்-டவுன் கடந்த 23-ம் தேதி இரவு 7.37 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், திட்டமிட்டபடி சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி44 ராக்கெட் மூலம் 2 செயற்கைக் கோள்களும் 24-ம் தேதி இரவு 11.37 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டன. புறப்பட்ட 13 நிமிடம் 26 விநாடிகளில் 274 கி.மீ. தூரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் மைக்ரோசாட் - ஆர் செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ராக்கெட்டின் இறுதி நிலையான பிஎஸ் 4 இன்ஜின் 1 மணி நேரம் 40 நிமிடம் பயணித்து 453 கி.மீ. தூரத்தில் புவி வட்டப்பாதையில் கலாம்சாட் செயற்கைக் கோளை நிலைநிறுத்தியது. இதுவரை ஏவப்பட்டதில் மிகக் குறைந்த தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக் கோள் இதுவாகும். புவி ஆய்வுக்கான மைக்ரோசாட் - ஆர் செயற்கைக் கோள் 700 கிலோ எடை கொண்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (டிஆர்டிஓ) நேரடி கட்டுப்பாட்டில், இந்திய எல்லைப் பகுதிகளை கண்காணிப்பது இதன் முக்கிய பணி. இதில் 3டி கேமராக்கள், லேசர் கருவிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. தகவல் தொடர்பு செயற்கைக் கோளான கலாம்சாட், 1.2 கிலோ எடை உடையது. 2 மாதங்களே ஆயுட்காலம் கொண்ட இது ஹாம்ரேடியோ சேவைக்கு பயன்படும். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பின் உதவியுடன் மாணவர் ரிபாத் தலைமையிலான குழுவினர் இந்த செயற்கைக் கோளை தயாரித்துள்ளனர். இஸ்ரோவின் குடியரசு தின பரிசு புதிய ஆண்டின் முதல் திட்டமே வெற்றிகரமாக அமைந்திருப்பது இஸ்ரோ விஞ்ஞானிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது: இந்த ஆண்டின் முதல் திட்டமே வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த வெற்றியை இந்திய மக்க ளுக்கு குடியரசு தினப் பரிசாக இஸ்ரோ சமர்ப்பிக்கிறது. உலகில் முதல்முறையாக ராக்கெட்டின் இறுதிக்கட்ட நிலையான பிஎஸ் 4 இன்ஜின் மூலம் குறைந்த சுற்றுவட்டப் பாதையில் செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டுவர மாணவர்கள் பணி யாற்ற வேண்டும். ‘சந்திரயான் 2’ ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும். 2020-ம் ஆண்டுக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் 2 ராக்கெட்கள் சோதனை முறையில் ஏவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியாவை முதல் இடத்துக்கு கொண்டுவர மாணவர்கள் பணி யாற்ற வேண்டும். ‘சந்திரயான் 2’ ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்படும்.

Comments