வடலூர் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம் .நாளை (21-ம் தேதி) தைப்பூச திருவிழா.

கடலூர் மாவட்டம் வடலூரில் தைப்பூச திருவிழா சத்திய ஞானசபையில் இன்று (20-ம் தேதி) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. ‘இறைவன் ஜோதி வடிவானவர்' என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடக்கும். குறிப்பாக தை மாத பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு 148-வது தைப்பூச திருவிழா இன்று (20-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவையொட்டி காலை அருட்பெரும் ஜோதி அகவல் பாராயணம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு தருமசாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நாளை (21-ம் தேதி) தைப்பூச திருவிழா நடக்கிறது. இதில் காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 10 மணி, நாளை மறுநாள் (22-ம் தேதி) காலை 5.30 ஆகிய 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். பின்னர் 23-ம் தேதி மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருவறை தரிசனம் நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவையொட்டி வெளிநாடு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். தைப்பூச திருவிழாவிற்கான ஏற்படுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகாதேவி, வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி கருணாகரன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Comments