தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள்

தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள்: ‘30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்தேன்’ கைதான தொழில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம். சென்னையில் தங்கும் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக கைதான தொழில் அதிபர், 30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததுடன், அந்த காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ததாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தார். சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ் என்ற சஞ்சீவி (வயது 48) நடத்தி வந்தார். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், கடந்த 10 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் தொழில் செய்து வந்தார். அவருடைய விடுதியில் 6 பெண்கள் தங்கி இருந்தனர். விடுதியிலேயே சம்பத்ராஜ் தனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தையும் நடத்தி வந்தார். இந்த விடுதியில் தங்கி இருந்த கல்லூரியில் அதிகாரியாக பணியாற்றும் காரைக்காலை சேர்ந்த பெண், தனது தலைமுடியை காயவைக்க குளியல் அறையில் உள்ள மின்சார பிளக்கில் ‘ஹேர் ட்ரையரை’ சொருகினார். அப்போது அதில் சிறிய கேமரா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீஸ் அதிகாரியாக உள்ள தனது உறவினருக்கு தகவல் கொடுத்தார். அப்போது அவர், ஒரு செல்போன் செயலி மூலமாக வேறு எங்காவது கேமராக்கள் உள்ளதா? என கண்டுபிடிக்கும்படி கூறினார். அதன்படி அவர், செல்போன் செயலி மூலமாக விடுதி முழுவதும் சோதனை செய்தார். அதில் 3 குளியல் அறைகளிலும், 3 படுக்கை அறையில் உள்ள எல்.இ.டி. பல்புகளிலும், பெண்கள் உடைகளை மாற்றும் பகுதியில் உள்ள துணிகள் மாட்டும் ‘ஹேங்கர்’ ஆகியவற்றிலும் மொத்தம் 9 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தார். இது பற்றி ஆதம்பாக்கம் போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தார். அதன் பேரில் அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் அதிரடியாக சோதனை செய்து 9 ரகசிய கேமராக்களையும் கைப்பற்றினர். இது தொடர்பாக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு அஸ்தினாபுரத்தில் இருந்த சம்பத்ராஜை பிடிக்க போலீசார் சென்றனர். இதை அறிந்த சம்பத்ராஜ் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது. மேற்கொண்டு அவரால் ஓட முடியாததால், போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர். போலீசாரிடம் சம்பத்ராஜ், அளித்த வாக்குமூலம் வருமாறு:- திருச்சியை சேர்ந்த நான், சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்தேன். சென்னை தேனாம்பேட்டையில் கட்டுமான நிறுவன தொழில் நடத்தினேன். அப்போது உரிய முறையில் வீடுகள் கட்டித்தராததால் மத்திய குற்றப்பிரிவு போலீசில் மோசடி புகார் செய்யப்பட்டது. 2012-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்னை கைது செய்தனர். அதன்பிறகு ஆதம்பாக்கத்தில் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை மாதம் ரூ.24 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்தேன். என்னுடைய குழந்தைகளுக்கு ஆதம்பாக்கத்தில் உள்ள பிரபல பள்ளியில் படிக்க இடம் கிடைக்காததால், அஸ்தினாபுரத்துக்கு சென்றேன். இதனால் ஆதம்பாக்கம் வீட்டை வேலைக்கு செல்லும் பெண்களுக்கான தங்கும் விடுதியாக மாற்ற திட்டமிட்டேன். இதுபற்றி ஆன்லைனில் விளம்பரம் செய்தேன். அதை பார்த்து 6 பெண்கள் வந்தனர். அவர்களிடம் மாதம் தலா ரூ.7 ஆயிரம் வாடகை பெற்றேன். இங்குள்ள பெண்கள் அனைவரும் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், விடுதியில் பகல் நேரத்தில் எனது கட்டுமான நிறுவனத்தின் அலுவலகமாக பயன்படுத்தி வந்தேன். ஏற்கனவே கட்டுமான நிறுவனம் நடத்தியபோது என்னிடம் வேலைக்கு வந்த 30-க்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்தேன். அதை வீடியோவாக பதிவு செய்து வைத்து உள்ளேன். அதன் பிறகு விடுதியில் தங்கி உள்ள பெண்கள் மீதும் எனக்கு ஆசை ஏற்பட்டது. அவர்களை எப்படி எனது ஆசைக்கு இணங்க செய்வது? என்று திட்டமிட்டேன். அப்போது ரகசிய கேமராக்கள் மூலமாக அவர்கள் குளியல் அறை மற்றும் படுக்கை அறைகளில் அரைகுறை ஆடைகளில் இருப்பதை படம்பிடித்து, அதை காட்டி அவர்களை மிரட்டி உல்லாசமாக இருக்கலாம் என்று திட்டமிட்டேன். இதற்காக ‘ஆன்லைனில்’ விற்பனை செய்யப்பட்ட ‘வை-பை’ மூலம் இயங்கக்கூடிய 9 நவீன ரக சிறிய கேமராக்களை வாங்கினேன். உளவுத்துறையினர் பயன்படுத்தும் இந்த கேமராக்கள் ஒவ்வொன்றும் ரூ.2 ஆயிரத்து 500 ஆகும். இந்த கேமராக்களை ‘வை-பை’ மூலமாக இயக்கி ஆபாச காட்சிகளை பார்க்கலாம். இந்த கேமரா, ஆட்கள் நடமாடும் சத்தம் கேட்டால் மட்டுமே பதிவு செய்யும். மற்ற நேரங்களில் இயங்காது. பகலில் பெண்கள் அனைவரும் வேலைக்கு சென்றபிறகு நானே, குளியல் அறைகள், படுக்கை அறைகளில் கேமராக்களை ரகசியமாக பொருத்தினேன். அதில் பதிவாகும் காட்சிகளை வை-பை மூலமாக செல்போனில் வைத்து பார்க்கலாம் என ஆசைப்பட்டேன். ஆனால் அதற்குள் போலீசாரிடம் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கைதான சம்பத்ராஜை, ஆலந்தூர் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிகள் முறையான அனுமதி பெற்று இருக்க வேண்டும். அந்த விடுதிகள் அனுமதி பெறப்பட்டு உள்ளதா? என்பதை போலீசாரும், வருவாய் துறை அதிகாரிகளும் கண்காணிப் பார்கள் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments