போட்டித் தேர்வுக் களமாக மாறிய ரெயில் நிலையம்

அரசு வேலை வாய்ப்பை பெறுவதற்கு போட்டி தேர்வு எழுதும் இளைஞர்கள் குழுவாக அமர்ந்து படிக்கும் வழக்கம் பெருகிக்கொண்டிருக்கிறது. ரெயிலில் பயணித்து வேலைக்கு செல்பவர்களில் நிறைய பேர் பணி முடிந்து வீடு திரும்பு வதற்கு முன்பு ரெயில் நிலையத்தில் அமர்ந்து போட்டி தேர்வுக்கு தங்களை தயார் படுத்திக்கொள்கிறார்கள். பீகார் மாநிலத்தில் உள்ள சாசராம் ரெயில் நிலையத்தில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி எந்தவிதமான சச்சரவுமின்றி போட்டித்தேர்வுக்கு குழுவாக அமர்ந்து படித்து ஆச்சரியப்பட வைக்கிறார்கள். அவர்களுக்கு ரெயில் நிலைய அதிகாரிகளும், ரெயில்வே போலீசாரும் உறுதுணையாக இருந்து தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியும் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அங்கு அமர்ந்து படித்து வேலை வாய்ப்பை பெற்றவர்கள், போட்டித் தேர்வுக்கு முழு கவனம் செலுத்தி படிப்பவர்கள் தினமும் வந்து பயிற்சி அளிக்கிறார்கள். இங்கு 2002-ம் ஆண்டில் இருந்தே மாணவர்கள் தேர்வுக்கு படித்து கொண்டிருக் கிறார்கள். சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை பிரச்சினை இருக்கிறது. அருகில் உள்ள மலைக்கிராமங்களில் போதிய மின் விளக்கு வசதி இல்லாத நிலையும் நீடிக்கிறது. அதனால் தாங்கள் படிப்பதற்கு ஏற்ற இடமாக சாசராம் ரெயில் நிலையத்தை தேர்வு செய்துவிட்டார்கள். ‘‘எங்கள் கிராமங்களில் மின்சார வசதி இல்லை. சிலர் பக்கத்து கிராம பகுதிகளுக்கு சென்று தெரு விளக்கில் படிக்கிறார்கள். ரெயில் நிலையத்தில் நிறைய பேர் ஒன்றாக அமர்ந்து படிப்பதால் நானும் இங்கு வந்து படிக்கிறேன். இப்படி குழுவாக அமர்ந்து படிப்பது போட்டித் தேர்வை எளிதாக எதிர்கொள்ள உதவுகிறது. நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள முடிகிறது’’ என்கிறார், மலைக் கிராமத்தை சேர்ந்தவரான வசிகுமார்.

Comments