ரூ.800 கோடியில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை ஜனவரியில் விண்ணில் செலுத்த திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

‘ரூ.800 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை ஜனவரி மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2008-ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இதன் மூலம் நடந்த ஆய்வில் சந்திரனில் தண்ணீர் இருப்பதை இந்தியா கண்டுப் பிடித்தது. தொடர்ந்து சந்திரனில் உள்ள பாறைகளை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதன்படி இஸ்ரோ தயாரித்த சந்திரயான்-2 விண்கலத்தை ஜனவரி மாதம் விண்ணில் செலுத்துவதற்கான பணியில் தற்போது இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:- அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்தும் வகையில் ‘தெற்காசிய செயற்கைகோள்’ ஆகியவை இதில் அடங்கும். ஸ்மார்ட் சிட்டி, தொலைநோக்கு திட்டம் கையாளும் அமைச்சகங்கள் உள்பட பல்வேறு துறை அமைச்சகங்கள் விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு முன்னணி நாடு என்ற நிலையை எட்டி உள்ளது. அந்தவகையில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட அதிவிரைவு தகவல் தொடர்புக்கான ஜிசாட்-7ஏ செயற்கைகோள் அதன் செயல்படும் புவிவட்டப்பாதைக்கு கொண்டு செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். ஓரிரு நாட்களில் இந்த தகவல் தொடர்பு செயற்கைகோள் செயல்பட தொடங்கும். திட்டமிட்ட ஆயுள் காலத்தை விட கூடுதலான ஆயுள்காலத்தை இந்த செயற்கைகோள் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சந்திரயான்-2 விண்கலம் ரூ.800 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் தலைமை நிலையத்தில் இறுதிக்கட்ட சோதனையில் இருக்கிறது. இதில் சந்திரயான்-1 விண்கலத்தை விட சந்திரயான்-2 விண்கலத்தில் பல்வேறு நவீன கருவிகள் பொருத்தப்பட்டு மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சந்திரயான்-2 விண்கலத்தில் உள்ள ரோவர் வகை வாகனத்தை, இதுவரை கண்டுபிடிக்கப்படாத சந்திரனின் தென் துருவத்தை நோக்கமாக கொண்டு, அதன் அருகில் முதன் முதலில் தரையிறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பகுதியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாறைகள் உள்ளன. இவற்றை எந்த நாடுகளும் ஆய்வு செய்ததில்லை. இதனை ஆய்வு செய்வதன் மூலம் உலகம் எப்போது தோன்றியது என்பது போன்ற தகவல்கள் தெரியவரும். இதனை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. பொருத்தமில்லாத வானிலை நிலவிவந்ததால் கடந்த ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படவில்லை. அதை ஜனவரி மாதம் விண்ணில் செலுத்துவதற்கான பணியில் முழுவீச்சுடன் இறங்கி உள்ளோம். இதன் மூலம் விண்வெளி தொழில் நுட்பத்தில் புதிய உயரத்தை இந்தியா எட்டும். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Comments