மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு 45 பள்ளி துணை ஆய்வாளர்கள் அரசாணை வெளியீடு

புதியதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்ற 45 பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் தற்போது 52 சீரமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணியிடங்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. அந்த பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்றும், அந்த பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் ஒத்த பணியிடங்களாக உள்ளன. அதனால் துணை ஆய்வாளர்களை நியமித்தால் கூடுதல் செலவினம் ஆகாது. எனவே அந்த பணியிடங்களை அனுமதிக்கலாம். அந்த இடங்களை தகுதியுள்ள பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பிக் கொள்ள அரசாணை வழங்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் கடந்த ஆண்டு நிலவரப்படி உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு நிரப்பவும் அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் ஆய்வு செய்யப்பட்டு, உபரி ஆசிரியர்களை கொண்டு 45 அலுவலகங்களுக்கு பள்ளித் துணை ஆய்வாளர் பணியிடங்களை தோற்றுவிக்கலாம் என்று அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Comments