ஜனவரி 4 முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது: சென்னை புத்தக கண்காட்சி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 4-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடக்கிறது. இதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் வயிரவன், துணைத் தலைவர் மயிலவேலன், செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் டி.எஸ்.சீனிவாசன் ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 42-வது சென்னை புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 17 நாட்கள் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தக கண்காட்சி நடைபெறும். தமிழுக்கு 487 அரங்குகள் என மொத்தம் 820 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. ஜனவரி 5-ந்தேதியன்று புத்தக கண்காட்சி வளாகத்தில் தமிழ் அன்னை சிலை நிறுவப்பட உள்ளது. இதனை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் திறந்து வைக்கிறார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் 8-ந்தேதி ‘வாசித்தேன் யோசித்தேன்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி நமது பண்பாட்டை பறைசாற்றும் வகையில் 16-ந்தேதி நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு, திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பிக்க இருக்கிறார்கள். முதல் முறையாக இந்த ஆண்டு சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது அறிமுகப்படுத்தப்பட்டு, முதல் பெண் பதிப்பாளர் வனிதா பதிப்பகம் அம்சவேணி பெரியண்ணன் பெயரிலான விருது ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதிக்கு வழங்கப்பட உள்ளது. புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவில் பதிப்பு துறையில் 25 ஆண்டு சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கி, ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன் கவுரவிக்கிறார். கண்காட்சி வளாகத்தில் 2 ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. மேலும் 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் புத்தகம் வாங்குவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படும். ‘பபாசி’ இணையதளம் மூலமும் நுழைவுச்சீட்டு பெறும் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். 12 லட்சம் தலைப்புகளில் 1½ கோடி புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். கடந்த ஆண்டு ரூ.10 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.15 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments