2 ஆண்டுகளில் விண்வெளிக்கு இந்திய வீரர் செல்வார் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

2 ஆண்டுகளில் விண்வெளிக்கு இந்திய வீரர் செல்வார் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். இஸ்ரோ தலைவர் சிவன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் மதியம் குமரி மாவட்டம் வந்தார். அவர் அகஸ்தீஸ்வரம் பகுதி மற்றும் தேரேகால்புதூரில் உள்ள சகோதரிகள் வீடுகளுக்குச் சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- ரூ.10 ஆயிரம் கோடி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) சார்பில் விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பி வைக்கும் ‘ககன்யான்‘ திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். இந்த திட்டத்துக்காக கடந்த 10 ஆண்டுகளாக நிதி கேட்டு வந்தோம். தற்போது மத்திய அரசின் மந்திரிசபைக் கூட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அதிகமானது என்றாலும், இவ்வளவு பெரிய தொகையை மத்திய அரசு ஒதுக்கி இருப்பது பெரிய விஷயம்தான். ‘ககன்யான்‘ திட்டத்தின்படி முதன்முதலாக விண்வெளிக்கு ஒரு விண்வெளி வீரர் மட்டும்தான் அனுப்பி வைக்கப்பட இருக்கிறார். அந்த வீரர் விமானப்படையில் இருந்து தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட இருக்கிறார். அதற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தகுதி இருக்கும் பட்சத்தில் அந்த வீரரை தேர்வு செய்து ஒரு வருட காலம் பயிற்சி அளிக்க இருக்கிறோம். 2 ஆண்டுகளில் விண்வெளிக்கு இந்திய வீரர் செல்வார். இதற்காக தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக 4-வதாக இந்தியா சார்பில் விண்வெளிக்கு இந்திய வீரர் அனுப்பி வைக்கப்படுகிறார். இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு சிவன் கூறினார்.

Comments