குரூப்-2 முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- குரூப்-2 பதவிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் வருகிற 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதி மாலை 5.30 மணிக்குள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ்களை மேற்குறிப்பிட்ட நாட்களில் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் அந்த விண்ணப்பதாரர்கள் முதன்மை எழுத்து தேர்வில் கலந்து கொள்ள விருப்பமில்லை எனக்கருதி அவர்களுடைய விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. முதல்நிலை எழுத்து தேர்வுக்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வு கட்டணம் ரூ.150-ஐ அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணையில் தெரிவித்துள்ளவாறு அடுத்த மாதம் 10-ந் தேதிக்கு முன்னர் கண்டிப்பாக செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே அவர்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments