அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி போலீசில் தொழில் அதிபர் புகார்

மகன், மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் தொழில் அதிபர் புகார் செய்து உள்ளார். கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 53). தொழில் அதிபரான இவருக்கு சுபஸ்ரீ(28) என்ற மகளும், கார்த்திக்(26) என்ற மகனும் உள்ளனர். இருவரையும் மத்திய அரசு துறையில் வேலைக்கு சேர்த்துவிட முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் சதாசிவம் நேற்று சென்னை அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், எனது நண்பர் மூலம் மாயவரத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன்(45) என்பவர் என்னிடம் அறிமுகமானார். மத்திய அரசு துறையில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் தனக்கு தெரியும் என்றும், எனது மகளுக்கு ஐ.ஏ.எஸ்., மகனுக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார். அதற்கு ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படி கடந்த ஆண்டு அரும்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் வைத்து 2 தவணையாக ரூ.25 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன். ஆனால் இதுவரையிலும் அவர் சொன்னபடி எனது மகன், மகளுக்கு அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறார். அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. எனவே ரூ.25 லட்சம் மோசடி செய்த வெங்கடகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார். இதுபற்றி அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments