இந்தியாவில் 2032-ல் ஒலிம்பிக் போட்டி?

இந்தியாவில் 2032-ல் ஒலிம்பிக் போட்டி நடத்தப்படலாம் எனக் கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் தாங்கள் மிகத் தீவிரமாக இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் (ஐ.ஓ.ஏ.) நரீந்தர் பத்ரா கூறுகிறார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான விருப்பத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் தெரிவித்துள்ள ஐ.ஓ.ஏ., இவ்விஷயத்தில் மத்திய அரசின் ஆதரவை எதிர்பார்க்கிறது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியா வந்த ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக்கிடம், 2032 ஒலிம்பிக் போட்டியை நம் நாடு நடத்த விரும்பும் விஷயத்தைத் தெரிவித்தார், பத்ரா. அம்முயற்சிக்கு தாமஸ் பாக்கும் வரவேற்புத் தெரிவித்தார். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் விருப்பத்தைத் தெரிவிக்கும் முறைப்படியான விண்ணப்பமும் ஒலிம்பிக் கமிட்டியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஐ.ஓ.ஏ. பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா, ஒலிம்பிக் கமிட்டியின், போட்டியை நடத்துவதற்கான விண்ணப்பக் குழுவைச் சந்தித்தார். ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் போட்டியை நடத்த விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கான இணை இயக்குநர் ஜாக்குலின் பாரட் தலைமையிலானது அக்குழு. இந்த மாத தொடக்கத்தில் டோக்கியோவில் நடைபெற்ற இந்த அமைப்பின் செயற்குழு கூட்டத்துக்குப் பின் இச்சந்திப்பு நடைபெற்றது. ‘‘2032 ஒலிம்பிக்கை பொறுத்தவரை நாங்கள் மிகவும் முனைப்பாக இருக்கிறோம். அது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கடிதம் அளித்துவிட்டோம். ஒலிம்பிக் கமிட்டியின் விண்ணப்பக் குழுவையும் நான் சந்தித்திருக்கிறேன். அப்போது எனது முயற்சியை வரவேற்ற அவர்கள், இந்தியா சீக்கிரமே ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்று தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தார்கள்’’ என்று பத்ரா சொல்கிறார். இந்தியாவில் ஒலிம்பிக்கை நடத்துவது என்றால் டெல்லி அல்லது மும்பையில் நடத்தலாம் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நினைக்கிறது. அதேநேரம், மற்ற நகரங்களுக்கான வாய்ப்பையும் அவர்கள் முற்றிலும் நிராகரித்துவிடவில்லை. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவது பற்றி பல்வேறு அலசல்கள், தகவல்கள் இதற்கு முன் உலா வந்திருந்தாலும், இங்கே ஒலிம்பிக்கை நடத்த விருப்பம் தெரிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. ‘‘முதல்கட்டமாக, ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பிக்கும் விருப்பத்தை ஒரு நாடு தெரிவிக்க வேண்டும், அதற்குப் பின்புதான் விருப்பம் தெரிவித்த நாடு அல்லது நகரத்தின் பெயர், விண்ணப்பப் பட்டியலில் இடம்பெறும். இந்தியா இதற்கு முன்பு ஒலிம்பிக் போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்ததோ, விண்ணப்பித்ததோ இல்லை’’ என்கிறார் பத்ரா. 2032 ஒலிம்பிக் போட்டிக்கான விண்ணப்ப நடைமுறையே 2022-ம் ஆண்டுதான் தொடங்கும். அதன்பிறகு, 2032 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாட்டை 2025-ல் முறைப்படி அறிவிப்பார்கள். 2032 ஒலிம்பிக் போட்டியை நடத்த சீனாவின் ஷாங்காய் நகரம் விரும்புகிறது. 2000-ல் சிட்னியில் ஒலிம்பிக் போட்டியை நடத்திய ஆஸ்திரேலியாவும் இதற்கான போட்டியில் முன்னிற்கிறது. தீவிரப் பகையாளிகளாக இருந்த வடகொரியாவும் தென்கொரியாவும் இணைந்து 2032 ஒலிம்பிக்கை நடத்த விரும்புகின்றன. அந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை தனது நாட்டின் 13 நகரங்களில் நடத்த ஜெர்மனியும் ஆசைப்படுகிறது. விண்ணப்ப நடைமுறைகளுக்காகத் திட்டமிடவும், முறையான திட்டத்துடன் மத்திய அரசை அணுகவும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தீர்மானித்திருக்கிறது. மத்திய அரசு மட்டுமல்ல, போட்டி நடைபெறும் நகரம் அமைந்திருக்கும் மாநில அரசு மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் ஆதரவும் வேண்டுமாம். இந்திய ஒலிம்பிக் சங்கம் இவ்விஷயத்தில் வேகம் காட்டினாலும், இதில் மத்திய அரசு இதுவரை நிதான முகம்தான் காட்டுகிறது. ஒலிம்பிக் போட்டியை நடத்துவதை விட, பொதுவாக ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வெல்வதிலும், நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும்தான் தங்கள் கவனம் என்கிறார், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன்சிங் ரத்தோர். இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த முனைவது, இயல்பாகவே இங்கு விளையாட்டு வசதிகளை மேம்படுத்தும், நாட்டில் ஒரு புதிய விளையாட்டுப் புரட்சியை ஏற்படுத்தும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

Comments