அலங்காநல்லூரில் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி அரசாணை வெளியீடு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கடந்த 2016-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து மெரினா கடற்கரையில், பல்வேறு இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தின. அதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு நிபந்தனைகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. அதற்கான சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் சில கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு கால்நடை பாதுகாப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் - 2017-ன் அடிப்படையில், குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம் என்று அனுமதித்துள்ளார். அதன்படி, மதுரை தெற்கு தாலுகாவில் உள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 15-ந் தேதியும்; வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பாலமேட்டில் ஜனவரி 16-ந் தேதி அன்றும்; அலங்காநல்லூரில் ஜனவரி 17-ந் தேதியிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments