பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் 5-ந் தேதி கடைசி நாள்

மார்ச்-2019 பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்களுக்கு வருகிற 5-ந் தேதி (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் (வருகிற 30 மற்றும் 1-ந் தேதிகள் தவிர) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-1, பிளஸ்-2 பொது தேர்வு எழுதி தோல்வியுற்ற பாடங்களில் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஒவ்வொரு பாடத்துக்கு ரூ.50 தேர்வு கட்டணமும், ரூ.35 இதர கட்டணமும், ஆன்-லைன் கட்டணம் ரூ.50-ம், முதன்முறையாக எழுத உள்ள தனித்தேர்வர் கள் தேர்வு கட்டணமாக ரூ.150-ம், இதர கட்டணமாக ரூ.35-ம், ஆன்-லைன் பதிவு கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, தனித்தேர்வர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே அரசு தேர்வுத்துறை பின்னர் அறிவிக்கும் நாளில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய இயலும். தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திலேயே தேர்வு எழுத வேண்டும். மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments