‘உயர்ந்த’ மனிதரும் ‘சின்ன’ மனிதர்களும்!

இந்தியர்களை மட்டுமல்லாது, இதர நாடுகளையும் ‘அண்ணார்ந்து’ பார்க்க வைத்துவிட்டது, ‘உலகிலேயே மிக உயரமான சிலை’. இந்த ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’தான் கடந்த வார ‘பரபர’ செய்தி! ‘அரசியல் தலைவர்களைச் சிறுமைப்படுத்த மிகச் சரியான வழி சிலை வைப்பது’ என்றார் ஓர் அறிஞர். அதை எப்போதுதான் நம் தலைவர்கள் உணர்ந்துகொள்வார்களோ தெரியவில்லை. படேலுக்குச் சிலை வைத்ததெல்லாம் சரிதான். ஆனால், அவரது கொள்கைகளை, சிந்தனை களை அந்தச் சிலைக்குக் கீழே வைத்துப் புதைத்துவிட்டதுதான் வேதனை. பழகுவதற்கு இனியவர்! பல மாநிலங்களை ஒருங்கிணைத்து இந்தியா எனும் ஒற்றை தேசமாக எழுப்பிய பெருமை சர்தார் வல்லபாய் படேலுக்கு உண்டு. ஆனாலும், அந்தப் பெருமையைக் காரணம் காட்டி, இந்திய அரசியலில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல், மற்றவர்களைக் காட்டிலும் தன்னை உயர்ந்தவராகவும் காட்டிக்கொள்ளாமல், சாமானியர்களில் ஒருவராகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார், அந்த இரும்பு மனிதர். பட்டப் பெயர்தான் இரும்பு மனிதர். ஆனால், பழகுவதற்கு இனியவர் என்கி றார்கள் அவருடன் பழகிய சான்றோர்கள். காந்தியைப் போன்றே எளிமையை விரும்பிய அவருக்கு, இப்படியான சிலை வைத்ததை அவரே விரும்பியிருக்க மாட்டார் என்பதுதான் உண்மை. அதை வெளிப்படையாகச் சொல்லும் துணிச்சலும் அவருக்கு இருக்கும். அதனால்தான் அவர், ‘Standing tall..!’ உயர்ந்த மனிதன் அதென்ன ‘ஸ்டேண்டிங் டால்?’ எந்த ஒரு நெருக்கடியான சூழலிலும், தோல்வித் தருணங்களிலும் முன்வைத்த காலைப் பின் வைக்காமல், கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று, அச்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தி, தலையை உயர்த்தி வீரத்துடன் நடைபோடும் நபர்களை நாம் சந்தித்திருப்போம் இல்லையா..? இத்தனை குணங்களையும் இரண்டே சொற்களில் விளங்க வைக்கும் சொல் வழக்குதான் ‘ஸ்டேண்டிங் டால்’. இதை ‘Stand tall’ என்றும் சொல்லலாம். முடியாட்சிக் காலத்தில், போர்களின்போது குதிரைச் சேணத்தில் அமர்ந்துகொண்டு வீரர்கள் போரிடுவார்கள். சில நேரம், அந்தச் சேணத்தின் மீது நின்றுகொண்டும் போரிடுவார்கள். மிகவும் துணிச்சலான வீரர்களால் மட்டுமே அவ்வாறு நின்றுகொண்டு போரிட முடியும். ஏனென்றால், கொஞ்சம் அசந்தால், குதிரை நம்மைக் கீழே தள்ளிவிடும். எனவே, குதிரை மீது நிற்பதில் மட்டுமல்லாமல், சண்டையிடுவதிலும் நம் கவனத்தைக் குவித்திருக்க வேண்டும். அப்படியான சமநிலை, சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதிலிருந்து வந்ததுதான் மேற்கண்ட சொற்றொடர். சிலைதான் உயர்ந்து நிற்கிறது. ‘சின்ன’ மனிதர்களோ அதைச் சாதனை என்கிறார்கள்!

Comments