பொருத்தமில்லாத திருமணத்தால் விவாகரத்து கேட்கிறேன் ‘நான் கிராமத்தான்; மனைவி ஐஸ்வர்யா நாகரிகப் பெண்’ லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் வேதனை

‘‘என் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டேன். அதில் இருந்து இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன்’’ என்று ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப். இவருக்கும் ஆர்ஜேடி எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே 12-ம் தேதி பாட்னா நட்சத்திர ஓட்டலில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. சிறையில் இருந்து பரோலில் வந்த லாலு பிரசாத், மகன் திருமணத்தை விமரிசையாக நடத்தி வைத்தார். இந்நிலையில், பாட்னா சிவில் நீதிமன்றத்தில் மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு தேஜ் பிரதாப் சிங் நேற்றுமுன்தினம் மனு தாக்கல் செய்தார். இதனால் லாலு குடும்பத்தினரும் ஐஸ்வர்யா ராய் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தகவல் அறிந்த லாலு பிரசாத் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாகத் தன்னை வந்து சந்திக்கும்படி தேஜ் பிரதாப் யாதவுக்கு லாலு பிரசாத் தகவல் அனுப்பி உள்ளார். அதன்படி ராஞ்சியில் உள்ள சிறையில் லாலுவைச் சந்திக்க நேற்று தேஜ் பிரதாப் சென்றார். வழியில் புத்தகயாவில் தங்கி யிருந்த போது செய்தியாளர்களிடம் தேஜ் பிரதாப் கூறியதாவது: நான் சாதாரண வாழ்க்கை வாழ் பவன், கிராமத்தான். ஐஸ்வர்யா ராய் மெட்ரோபாலிடன் நகரில் வளர்ந்தவர். டெல்லியில் படித்தவர். நாகரிகமானவர், பண்புள்ளவர். எனக்கும் அவருக்கும் பொருத்தம் இல்லை. அதனால், திருமணம் வேண்டாம் என்று நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். யாரும் நான் சொல்வதை கேட்கவில்லை. என் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டேன். திருமணமான நாள் முதல் நான் இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். ஒருவர் எவ்வளவு நாட்களுக்குதான் இப்படி வாழ முடியும். என்னுடைய விவாகரத்து மனுவை வாபஸ் பெற போவதில்லை. இவ்வாறு தேஜ் பிரதாப் கூறினார். இதுகுறித்து ஐஸ்வர்யா ராயின் கருத்தை அறிய செய்தியாளர்கள் முயற்சித்தனர். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தேஜ் பிரதாப் சிங்கின் மனு, நவம்பர் 29-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Comments