ஏழைகளுக்கு மட்டும் இலவச அரிசி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

இலவச அரிசியை ஏழைகளுக்கு மட்டும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டம் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அமர்நாத்தின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு தமிழக அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்கிறது? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் கேட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி இலவச அரிசி திட்டத்துக்காக கடந்த 2017-18-ம் ஆண்டுகளில் ரூ.2,100 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று கூறினார். இலவசத்துக்கு எதிர்ப்பல்ல... இதைக்கேட்ட நீதிபதிகள், “பொதுமக்களுக்கு தமிழக அரசு இலவச பொருட்கள் வழங்குவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், உண்மையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தான் அவை சென்றடைய வேண்டும் அனைவருக்கும் இலவசம் என்பது ஏற்புடையது அல்ல. அவ்வாறு கொடுக்கவும் கூடாது. இலவச அரிசி என்பது ஏழைகளுக்கு தான் கொடுக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர். பெரும் தொகை பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடிகளுக்கு மேல் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வளவு பெரிய தொகை செலவு செய்து மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் உரியவர்களுக்கு சென்றடைய வேண்டும். இந்த இலவச அரிசி வழங்கும் திட்டம் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதை உடனடியாக நிறுத்த வேண்டும் வரிப்பணம் பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை அரசு இலவசமாக வழங்கும்போது, அதை முறையாக கண்காணிக்க வேண்டும். மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தை கொண்டுதான் இந்த இலவசங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி இருக்கும்போது அதை முறையாக கண்காணிக்க வேண்டும். இலவசங்களை வாரி வாரி வழங்குகின்றனர். மக்களும் தங்கள் மனநிலையை மாற்றிக்கொண்டு அரசு வழங்கும் இலவச பொருட்களை எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கிவிட்டனர். இதனால், சிறு சிறு தொழிலுக்கு கூட கூலியாட்கள் கிடைப்பது இல்லை. சிறு சிறு பணிகளுக்காக வடமாநிலங்களில் இருந்து கூலியாட்களை இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கிறது. அறிக்கை வேண்டும் எனவே, இந்த இலவச அரிசி என்பது ஏழைகளுக்கு தான் வழங்க வேண்டும். மேலும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதி தள்ளி வைக்கிறோம். தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் கழகம் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்டு உள்ள வரவு-செலவு தொடர்பான ஆண்டு அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comments