அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேய் பிடிப்பதாக வதந்தி

சுங்குவார்சத்திரம் கீரநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேய் பிடிப்பதாக வதந்தி பரவியதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த கீரநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் கீரநல்லூர் காந்தூர், பொடவூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 450 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சென்ற வாரம் இந்த பள்ளியில் 7-ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்கள் திடீரென எழுந்து ஓ என அழுது கை, காலை உதைத்து மேலும் கீழும் குதித்து ஆடியுள்ளனர். மாணவர்களின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், அவர்களின் பெற்றோர்களை அழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் அதே வகுப்பில் 7-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் அதேபோல் அழுது கொண்டு எகிறி குதித்து உள்ளனர். இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மாணவர்கள் இந்த செயல் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் பரவியது. பெற்றோர்கள் அலறியடித்து கொண்டு பள்ளிக்கு ஓடி வந்தனர். அந்த பள்ளியில் 7-ம் வகுப்பில் பேய் உள்ளதாகவும், அந்த பேய்தான் மாணவர்களை ஆட்டி வதைக்கிறது என மாணவ-மாணவிகளிடேயே வதந்தி பரவியது. இதனால் குறிப்பிட்ட இந்த மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். கடந்த 19-ந் தேதி (திங்கட்கிழமை) வழக்கம் போல் பள்ளி இயங்கியது. பாதிக்கப்பட்ட 12 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை. பள்ளியில் குறிப்பிட்ட அந்த வகுப்பில் பேய் உள்ளதாக பெற்றோருக்கும் மாணவ- மாணவிகளுக்கும் இடையே அச்சம் நிலவுகிறது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தார். இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் போது:- மாணவர்கள் சிலருக்கு உடல்நிலை சரியில்லை. இதை சாக்காக வைத்து மற்ற மாணவ-மாணவிகள் பள்ளிக்கு விடுமுறை எடுக்க இதை வாய்ப்பாக பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பேய் பிடிப்பதாக பெற்றோர்கள் பீதி அடைந்துள்ளனர்.

Comments