சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் வாலிபர்களிடம் பணம் பறிக்க முயன்ற போலி போலீஸ்காரர் கைது சினிமா பட பாணியில் சம்பவம்

சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் வாலிபர்களிடம் பணம் பறிக்க முயன்ற போலி போலீஸ்காரர் கைதானார். சென்னை சென்டிரல் அருகேயுள்ள மூர்மார்க்கெட் ரெயில் நிலைய வளாகத்தில் 2 வாலிபர்களிடம், போலீஸ் உடையில் இருந்த ஒருவர் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதை அந்த வழியாக சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் சுதாகர் (வயது 24) பார்த்தார். போலீஸ் உடையணிந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து, அவரிடமே சென்று விசாரித்தார். அவரது அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்தபோது, அந்த நபர் போலி போலீஸ்காரர் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை, சுதாகர் பிடித்து சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், போலீஸ் உடையுடன் வாலிபர்களை மிரட்டியது திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த வேல்ராஜ் (21) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சென்டிரல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் கூறியதாவது:- வேலையின்றி வீட்டில் இருந்து வந்த வேல்ராஜ் போலீஸ் உடையணிந்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட நினைத்துள்ளார். அதன்படியே போலீஸ் உடையில் பெரம்பூரில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு மின்சார ரெயிலில் பயணித்திருக்கிறார். அப்போது அந்த ரெயிலில் படிக்கட்டில் பயணம் செய்த 2 வாலிபர்களை மிரட்டி, அபராதம் என்ற பெயரில் பணம் வசூலிக்க நினைத்தார். அதற்கு முன்பாக அவர்களது செல்போன்களை வேல்ராஜ் வாங்கி வைத்துக்கொண்டார். செல்போன்களை கேட்டு வேல்ராஜுடன் அந்த வாலிபர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, அபராதம் கட்டி செல்போன்கள் வாங்கி கொள்ளுங்கள் என்று வேல்ராஜ் கூறினார். இந்த காட்சியை பார்த்து சந்தேகமடைந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சுதாகர் கையும் களவுமாக வேல்ராஜை பிடித்து எங்களிடம் ஒப்படைத்தார். போலீஸ் உடையுடன் வாலிபர்களிடம் பணம் பறிக்க முயன்ற குற்றத்துக்காக வேல்ராஜை கைது செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சினிமா பட பாணியில் நடந்த இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments