தமிழக கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குகிறது வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக கடலோர மாவட்டங் களில் வடகிழக்கு பருவமழை இன்று(வியாழக்கிழமை) தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிகளவு மழை பெறும். ஏற்கனவே தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டு வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. அந்தவகையில் வடகிழக்கு பருவமழை தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று(வியாழக்கிழமை) தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அதே பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (அதாவது இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் இதர பகுதிகளிலும், கேரளா மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகளிலும் படிப்படியாக வடகிழக்கு பருவமழை தொடங்கும். அடுத்த 24 மணி நேரத்தை(இன்று) பொறுத்தவரையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். நேற்று காலை 8.30 மணி யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், எண்ணூர், சென்னை டி.ஜி.பி. அலுவலகம், மாமல்லபுரம், பொன்னேரியில் தலா 5 செ.மீ., செங்குன்றம், கேளம்பாக்கம், திருபுவனம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

Comments