நாய்க்கறி பீதிக்கு முற்றுப்புள்ளி ‘ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்டது ஆட்டிறைச்சி தான்’ 5 நாட்களுக்கு பிறகு கால்நடை மருத்துவக்கல்லூரி அறிவிப்பு

சென்னைக்கு வந்த ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்டது ஆட்டிறைச்சி தான் என்று 5 நாட்களுக்கு பிறகு கால்நடை மருத்துவக்கல்லூரி சோதனை முடிவை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் நாய்க்கறி பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள அசைவ பிரியர்களை அதிர்ச்சியடைய செய்த சம்பவம் கடந்த 17-ந்தேதி காலை சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடந்தது. அன்றைய தினம் ராஜஸ்தானில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 ஆயிரத்து 190 கிலோ கெட்டுப்போன இறைச்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. அழுகிய நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட அந்த இறைச்சியின் நெஞ்சுப்பகுதி, வால் பகுதி நாயின் வடிவமைப்பை ஒத்திருந்ததால், அது நாய்க்கறி என்று பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியது. சமூக வலைதளங்களிலும் இது வேகவேகமாக பரவியது. ‘மீம்ஸ்’ கிரியேட்டர்களின் பிடியில் இருந்தும் இந்த விவகாரம் சிக்கவில்லை. குறிப்பாக இந்த இறைச்சி சென்னை மாநகரில் உள்ள அசைவ ஓட்டல்களுக்கு ‘சப்ளை’ செய்யப்பட இருந்ததும் கண்டறியப்பட்டது. ‘இத்தனை நாட்களாக ஓட்டலில் சாப்பிட்டு வந்தது உண்மையிலேயே ஆட்டுக்கறி தானா?’, என்ற சந்தேகத்தை அசைவ பிரியர்கள் மனதில் கடுமையாக விதைத்தது. இதனைத்தொடர்ந்து கைப்பற்றிய இறைச்சி துண்டுகளின் மாதிரியை சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். பொதுவாகவே 24 மணி நேரத்தில் பரிசோதனை பொருளின் தரத்தை உறுதி செய்துவிடும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கு இந்தமுறை ஏனோ சிக்கல் உருவானது. அன்றைய தினம் எந்த சோதனையும் செய்யப்படவில்லை. மறுநாளான 18-ந்தேதி விடுமுறை என்பதால் அன்றும் சோதனை நடக்கவில்லை. 19-ந்தேதி தான் பரிசோதனை தொடங்கியது. ஆனாலும் சோதனைகள் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் ரெயிலில் கெட்டுப்போன இறைச்சியை அனுப்பியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ரெயில்வே பாதுகாப்புப்படையினர் (ஆர்.பி.எப்.) தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் மீன் ‘பார்சல்’ என்ற பெயரில் இறைச்சி அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரெயிலில் அனுப்பப்பட்ட இறைச்சியை பெறுவதாக இருந்த முகவர் ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டார். இன்னொரு முகவர் கணேசனை போலீசார் தேடி வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து 5 பேர் கொண்ட தனிப்படை ஜோத்பூருக்கு விரைந்தது. அங்கு இந்த பார்சல்களை அனுப்பியது யார்? என்று கண்டறியப்பட்டு, உண்மை நிலவரம் வெளிக்கொணரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இறைச்சியை அனுப்பியவர்கள் யார்? என்பதை காட்டிலும், அனுப்பப்பட்டது நாய்க்கறியா, இல்லையா? என்ற கேள்வியே அனைவரிடத்திலும் மேலோங்கி காணப்பட்டது. அந்த எதிர்பார்ப்புக்கு 5 நாட்களுக்கு பிறகு நேற்று விடை கிடைத்தது. ரெயிலில் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சியின் மாதிரியின் மீதான பரிசோதனை விவரத்தை சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி நேற்று வெளியிட்டது. அதில், “பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட இறைச்சி மாதிரியின் முதுகு தண்டுவடம், கழுத்து பகுதியில் உள்ள எலும்பு அடுக்குகள், இடுப்பில் முக்கோண வடிவில் இருக்கும் எலும்பு மற்றும் கால் மூட்டு எலும்பு உள்ளிட்டவைகளை பரிசோதனையிட்டதில் இது ஆடு அல்லது செம்மறி ஆடு வகையை சேர்ந்த சிறிய உயிரினம். இந்த பரிசோதனை 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி முடிவடைந்தது. பாலித்தீன் பையில் அடைத்து அதிகாரிகள் சமர்ப்பித்த இறைச்சி மாதிரியின் மேற்கொள்ளப்பட்ட இறுதி முடிவு இது”, என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. கால்நடை மருத்துவக்கல்லூரியின் இந்த பரிசோதனை அறிக்கை அசைவ பிரியர்களின் பயத்தை போக்கியிருக்கிறது. இதன்மூலம் கடந்த 5 நாட்களான நிலவி வந்த நாய்க்கறி பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் நாய்க்கறி தொடர்பான பல்வேறு சந்தேகங்களும் சமூக வலைதளங்களில் வந்த பாடாக உள்ளன. குறிப்பாக ராஜஸ்தானில் உள்ள ஆடுகள் பார்க்க நாய் போலவே காட்சியளித்து வருவதால் இந்த விவகாரத்தில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது என்று ஒருதரப்பினர் விமர்சனம் செய்கிறார்கள். மற்றொரு தரப்பினர், ‘சோதனை முடிவு உடனடியாக வெளிவராதது ஏன்? பறிமுதல் செய்யப்பட்ட இடத்திலேயே பரிசோதனைக்கான இறைச்சி மாதிரியை எடுக்காதது ஏன்? போன்ற கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் நாய்க்கறி பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனி இந்த ‘பார்சலை அனுப்பியது யார்? என்ற கேள்விக்கு விடையளிக்க வேண்டியது, போலீசாரே.

Comments