அகில இந்திய பார் கவுன்சில் நிபந்தனையை நிறைவேற்றாத 34 ஆயிரம் பேர் வக்கீலாக பணியாற்ற தடை? தமிழ்நாடு பார் கவுன்சில் விரைவில் நடவடிக்கை

அகில இந்திய பார் கவுன்சில் நிபந்தனையை நிறைவேற்றாத 34 ஆயிரம் பேர் வக்கீலாக பணியாற்ற தடை விதிக்க தமிழ்நாடு பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது. வக்கீல்களுக்கான தேர்வு தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வக்கீல்களாக பதிவு செய்துள்ளனர். இவர்களில் 90 ஆயிரம் பேர் வக்கீல்களாக பணியாற்றி வருகின்றனர். சட்ட படிப்பை முடித்தவர்கள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே நிரந்தரமாக வக்கீலாக பணியாற்ற முடியும் என்ற விதி 2010-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் வரை சட்ட படிப்பை முடித்தவர்களுக்கு அந்தந்த மாநில பார் கவுன்சில் மூலம் தற்காலிக அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்த தேர்வை 2 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் தொடர்ந்து வக்கீலாக பணியாற்ற முடியும். அதுபோன்றவர்களுக்கு மட்டுமே பார் கவுன்சில் நிரந்தர அடையாள அட்டை வழங்குகிறது. கணக்கெடுக்கும் பணி 2 ஆண்டுகளுக்குள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை இடைநீக்கம் செய்யவும், அவர்கள் மீண்டும் எப்போது தேர்ச்சி பெறுகிறார்களோ அப்போது இடைநீக்கத்தை திரும்ப பெற்று வக்கீலாக பணியாற்ற அனுமதிக்கும்படியும் அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும் அகில இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 2 ஆயிரம் பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெறாததை தொடர்ந்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் 574 பேர் தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவர்கள் மீதான இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அந்த தேர்வில் எத்தனை பேர் தோல்வி அடைந்துள்ளனர், அவர்களில் எத்தனை பேருக்கு வக்கீலாக பதிவு செய்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது என்ற கணக்கெடுப்பை தமிழ்நாடு பார் கவுன்சில் தற்போது எடுத்து வருகிறது. 2 ஆயிரம் பேர் தோல்வி இதுகுறித்து தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:- வக்கீலாக பதிவு செய்து 2 ஆண்டுகளுக்குள் அகில இந்திய பார் கவுன்சில் நடத்திய தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதுகிறோம். அவர்களின் பெயர் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். அகில இந்திய பார் கவுன்சில் விதிப்படி வக்கீல்கள் நல நிதிக்காக சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே தொடர்ந்து வக்கீலாக பணியாற்ற முடியும். கடந்த 1993-ம் ஆண்டு வரை 3 ஆண்டுக்கு ஒரு முறை சந்தா செலுத்தப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அதன்பின்பு, வக்கீலாக பதிவு செய்யும்போதே வாழ்நாள் சந்தாவாக வசூலிக்கப்படுகிறது. 1993-ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த வக்கீல்களில் 7 ஆயிரம் பேர் சந்தா தொகை செலுத்தவில்லை. இதனால், அவர்களை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வக்கீல் சங்க சான்றிதழ் இதுதவிர, வக்கீல் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 5 வழக்குகளிலாவது ஆஜராகி இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஆஜரான வக்கீல்களை மட்டுமே தொடர்ந்து வக்கீலாக பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் 2015-ம் ஆண்டு இந்திய பார் கவுன்சில் விதியை கொண்டு வந்தது. இந்த விதிப்படி வக்கீலாக பணியாற்றி வருபவர்கள் சம்பந்தப்பட்ட வக்கீல் சங்கத்தில் இருந்து உரிய சான்றிதழ் பெற்று பார் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் அவ்வாறு சான்றிதழ் பெற்று அனுப்பி வைக்காத 25 ஆயிரம் வக்கீல்களை இடைநீக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments