திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் நாளை 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் விநாயகர், சந்திரசேகரர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. அதையொட்டி நாளை அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். மகாதீபம் இதையடுத்து பிரம்ம தீர்த்தத்தில் சுப்பிரமணியர் சுவாமி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக எழுந்தருள்வார்கள். மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். அப்போது சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலோ, வியாபார நிறுவனங்களிலோ மகாதீபம் ஏற்றிய பிறகே மின்விளக்குகளை எரியவிடுவார்கள். மேலும் தங்கள் வீடுகளிலும், வீட்டின் முன்பும் அகல்விளக்குகள் ஏற்றி வழிபடுவார்கள். பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணிக்கு சுமார் 10 ஆயிரம் போலீசார் திருவண்ணாமலையில் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆளில்லா குட்டிவிமானம் மூலம் பக்தர்கள் கூட்டம் கண்காணிக்கப்பட உள்ளது. மலை உச்சியில் கமாண்டோ படைவீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுகிறார்கள். மகாதீபம் ஏற்றிய பின் அன்று இரவு தங்க ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற உள்ளது. 24-ந் தேதி இரவு சந்திரசேகரர் தெப்ப உற்சவமும், 25-ந் தேதி அதிகாலையில் அருணாசலேஸ்வரர்- உண்ணாமலை அம்மன் கிரிவலமும், இரவில் பராசக்தி அம்மன் தெப்ப உற்சவமும், 26-ந் தேதி சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடக்கிறது. 27-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைகிறது.

Comments